search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலித்துகளுக்கு தொடர்ந்து துன்பம் கொடுத்தால் புத்த மதத்துக்கு மாறிவிடுவேன்: மாயாவதி
    X

    தலித்துகளுக்கு தொடர்ந்து துன்பம் கொடுத்தால் புத்த மதத்துக்கு மாறிவிடுவேன்: மாயாவதி

    தலித் இன மக்கள் மீதான தாக்குதல் தொடர்ந்தால் நானும் எனது கோடிக்கணக்கான தொண்டர்களும் இந்து மதத்தில் இருந்து விலகி புத்தமதத்தை தழுவுவோம் என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.
    நாக்பூர்:

    மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநாடு நடந்தது. அதில் கலந்து கொண்டு அக்கட்சியின் தலைவர் மாயாவதி பேசினார். அவர் கூறியதாவது:-

    டாக்டர் அம்பேத்கர் 1935-ம் ஆண்டு இந்து மதத் தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். இந்து மத தலைவர்கள் தலித்கள் மீதான ஆதிக்கத்தை நிறுத்த வேண்டும். இல்லையெனில் நான் இந்துவாக சாகமாட்டேன் என்று கூறி இருந்தார்.

    இந்த சீர்திருத்தத்துக்காக அவர் 21 ஆண்டுகள் அவகாசம் கொடுத்தார். இந்து மதத்தில் எந்த மாற்றமும் ஏற்படாததால் 1956-ம் ஆண்டு இதே நாக்பூரில் அவர் இந்து மதத்தை துறந்து விட்டு புத்த மதத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

    இந்து மதத்தை பாதுகாப்பதாக கூறிக் கொள்பவர்கள் அதன் பிறகாவது தலித் மக்களுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்குவார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் தலித் இனமக்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை.

    இந்து மத தலைவர்கள் தொடர்ந்து தலித் மக்களையும் பிற்படுத்தப்பட்ட மக்களையும் ஆக்கிரமித்து அவமரியாதை செய்து வருகிறார்கள். தலித் இன மக்கள் மீது இத்தகைய தாக்குதல் தொடர்ந்தால் நானும் இந்து மதத்துக்கு எதிரான முடிவை எடுக்க வேண்டியதிருக்கும்.

    பா.ஜ.க. தலைவர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கும் இன்று நான் ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். தலித் இன மக்களை அவமதிக்கும் செயல்பாடுகளை நீங்கள் நிறுத்தி கொள்ளாவிட்டால் நானும் எனது கோடிக்கணக்கான தொண்டர்களும் இந்து மதத்தில் இருந்து விலகி புத்தமதத்தை தழுவுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ஜ.க. தலைவர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கும் இந்த வி‌ஷயத்தில் நான் சற்று கால அவகாசம் வழங்குகிறேன். அதற்குள் இந்து மதத்தலைவர்கள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும்.

    இல்லையெனில் உரிய நேரத்தில் நானும் டாக்டர் அம்பேத்கர் போன்று மதம் மாறும் முடிவை எடுப்பேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 2014-ல் மின்னணு எந்திரங்களில் தில்லு முல்லு நடந்ததால்தான் பகுஜன் சமாஜ் கட்சி தோற்றது.

    2019-ம் ஆண்டுக்கு முன்பே அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பா.ஜ.க. முயற்சி செய்யும். அதை வைத்து தேர்தலையும் விரைவில் நடத்த திட்டமிட்டுள்ளனர். எனவே பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பகுஜன் சமாஜ் தொண்டர்கள் இப்போதே தயாராக வேண்டும்.

    பிற்படுத்தப்பட்ட இன மக்கள் இன்று நாடு முழுவதும் இடஒதுக்கீடு சலுகைகளை பெறுகிறார்கள் என்றால் அதற்கு டாக்டர் அம்பேத்கர்தான் காரணமாவார். காங்கிரஸ் கட்சிக்கோ, பாரதிய ஜனதா கட்சிக்கோ அதில் எந்த பங்களிப்பும் இல்லை.

    ஆனால் இந்த கட்சிகள் இடஒதுக்கீட்டை தாங்கள் கொண்டு வந்ததாக உரிமை கொண்டாட முயல்கின்றன.

    இவ்வாறு மாயாவதி பேசினார்.
    Next Story
    ×