search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரகசிய ஆலோசனை நடத்தவில்லை: நிரூபித்தால் பாக். தூதரை வெளியேற்றலாம் - மோடிக்கு காங். சவால்
    X

    ரகசிய ஆலோசனை நடத்தவில்லை: நிரூபித்தால் பாக். தூதரை வெளியேற்றலாம் - மோடிக்கு காங். சவால்

    காங்கிரஸ் தலைவர்களுடன் பாகிஸ்தான் தூதர் ரகசிய ஆலோசனை நடத்தியது நீங்கள் நிரூபித்தால் பாகிஸ்தான் தூதரை நாட்டை விட்டு வெளியேற்றலாம் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி நேற்று குஜராத்தில் பாலன்பூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசும் போது காங்கிரஸ் தலைவர்கள் மீது கடுமையாக குற்றம் சாட்டிப் பேசினார்.

    அவர் கூறுகையில், “காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் வீட்டில் சமீபத்தில் ரகசிய கூட்டம் ஒன்று நடந்தது. அந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி பாகிஸ்தான் தூதர், பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டு 3 மணி நேரத்துக்கும் மேல் ஆலோசனை நடத்தி உள்ளனர். அந்த கூட்டத்தில் அவர்கள் குஜராத் தேர்தல் பற்றியும் காங்கிரஸ் தலைவர் அகமது படேலை முதல்வராக்குவது பற்றியும் ஆலோசனை நடத்தினார்கள். இதுபற்றி காங்கிரஸ் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று கூறினார்.



    பிரதமர் மோடியின் குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளரான மணீஷ் திவாரி கூறியதாவது:-

    2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் பிரதமராக இருந்த மன்மோகன்சிங், அந்த 10 ஆண்டுகளில் ஒரு தடவை கூட பாகிஸ்தானுக்கு சென்றதில்லை. ஆனால் மோடி பிரதமரானதும் பாகிஸ்தானுக்கு சென்றார். அதற்கு பரிசாக பதான்கோட் தாக்குதலை பெற்றார்.

    1998-ல் வாஜ்பாய் பாகிஸ்தானுக்கு சென்றார். அதற்கு பரிசாக கார்கில் போர் வந்தது. 2001-ல் அவர் மு‌ஷரப்பை இந்தியாவுக்கு அழைத்தார். உடனே இந்திய பாராளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.

    ஆனால் காங்கிரஸ் இத்தகைய எந்த தவறையும் செய்யவில்லை. குறிப்பாக மன்மோகன்சிங் அதில் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார். அத்தகைய மன்மோகன்சிங் மீது குற்றம் சுமத்துவது சரியல்ல.

    காங்கிரஸ் தலைவர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தி, குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தூதர் தலையிடுவதாக நீங்கள் நிரூபித்தால் உரிய நடவடிக்கை எடுக்கலாமே? உடனே பாகிஸ்தான் தூதரை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடலாமே? ஏன் இன்னும் அதை செய்யவில்லை.

    இவ்வாறு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
    Next Story
    ×