search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எப்.ஆர்.டி.ஐ. மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு: பாராளுமன்றத்தில் புயலை கிளப்ப காங்கிரஸ் திட்டம்
    X

    எப்.ஆர்.டி.ஐ. மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு: பாராளுமன்றத்தில் புயலை கிளப்ப காங்கிரஸ் திட்டம்

    நிதி தீர்வு மற்றும் சேமிப்பு காப்பீடு மசோதாவை நிறைவேற்ற விடாமல், பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
    அகமதாபாத்:

    வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் நிதித்துறை நிறுவனங்கள் திவாலாகும் நிலை ஏற்படும்போது, அதனை சரிசெய்வதற்கு வகை செய்யும் நிதி தீர்வு மற்றும் சேமிப்பு காப்பீடு (எப்.ஆர்.டி.ஐ.) மசோதாவை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. இதில் பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வங்கிகள் திவாலாகிவிட்டால், வாடிக்கையாளர்கள் போட்டு வைத்துள்ள தொகையை எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற விதி சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விதியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

    கடந்த, ஜூன் 14-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து இந்த மசோதா ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.  ஆராய்ந்து வரும் பாராளுமன்ற கூட்டுக்குழு, இந்த மசோதா மீதான தனது அறிக்கையை, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் எப்.ஆர்.டி.ஐ. மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் கட்சி அமளியை கிளப்ப திட்டமிட்டுள்ளது.

    இதுகுறித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் நிருபர்களிடம் கூறுகையில், ‘மழைக்கால கூட்டத் தொடரில் எப்.ஆர்.டி.ஐ. மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த கூட்டத் தொடரில் அதனை நிறைவேற்ற முயற்சி செய்யும். காங்கிரஸ் கட்சி அதனை நிறைவேற்ற கடும் எதிர்ப்பு தெரிவிக்கும். அனைத்து எதிர்க்கட்சிகளையும் எங்களோடு இணைத்து மசோதாவை எதிர்க்க செய்வோம். சில பெருநிறுவனங்களுக்கு வழங்கிய கடன்களால் திக்குமுக்காடும் வங்கிகளை காப்பாற்றவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டிருக்கிறது’ என்றார்.

    இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு, பாராளுமன்றம், ஆர்.பி.ஐ, செபி, ஐ.ஆர்.டி.ஏ. உள்ளிட்டவை பலவீனமாகிவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் 15-ம் தேதி தொடங்கி ஜனவரி மாதம் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×