search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏ.டி.எம். கார்டு மூலம் நூதன முறையில் ரூ.12 லட்சம் அபேஸ்: 5 பேர் கைது
    X

    ஏ.டி.எம். கார்டு மூலம் நூதன முறையில் ரூ.12 லட்சம் அபேஸ்: 5 பேர் கைது

    பலமநேரில் ஏ.டி.எம். எந்திரத்தில் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பணத்தை திருடிய சென்னையைச் சேர்ந்தவர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஸ்ரீகாளஹஸ்தி:

    பலமநேரில் ஏ.டி.எம். எந்திரத்தில் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பணத்தை திருடிய சென்னையைச் சேர்ந்தவர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நவீன கருவிகளும், பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    பலமநேர் மண்டல பரி‌ஷத் அலுவலகம் எதிரே பாங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம். எந்திரம் உள்ளது. அதில் பணம் எடுத்த வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து மர்மமான முறையில் யாரோ பணம் எடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

    வங்கி ஏ.டி.எம். கார்டுகள் வாடிக்கையாளர்களிடமே உள்ள நிலையில் சென்னையில் இருந்து நூதன முறையில் பணம் எடுக்கப்பட்டு உள்ளதாக 22 பேர் பலமநேர் போலீசில் புகார் செய்துள்ளனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நூதன பணத் திருட்டில் ஈடுபட்ட 5 பேர் போலீசாரிடம் சிக்கினர்.

    இதுகுறித்து சித்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரபாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    பலமநேரில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் எடுத்தவர்களின் கார்டுகளில், தானாக பணம் சென்னையில் இருந்து எடுக்கப்படுவதாக புகார்கள் வந்தன.

    இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வந்தனர். பலமநேர் ஏ.எம்.சி. சோதனைச்சாவடி அருகே போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 5 பேர் கொண்ட கும்பலை பிடித்து விசாரித்தனர். அவர்கள், சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த நிரஞ்சன் (வயது 37), முகைதீன் (25), முகப்பேரைச் சேர்ந்த எம்.எஸ்.கே. ரக்ஷீத் (28), சாலிகிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (26), கிருஷ்ணகிரியைச் சேர்ந்த தமிழரசன் (25) என்பது தெரிய வந்தது.

    5 பேரும் பலமநேரில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம். எந்திரத்தில் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சென்னையில் இருந்த படியே 4 இடங்களில் நூதன முறையில் ரூ.12 லட்சத்துக்கு மேல் பணம் எடுத்து மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

    இதற்கு மூளையாக செயல்பட்ட இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாலகுமார், மும்பையைச் சேர்ந்த உமேஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர் என்றார்.

    இதையடுத்து மேற்கண்ட 5 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 லேப்டாப், 2 ஸ்கிம்மர், ரீடர் மற்றும் ரிக்கார்டர் கருவி, நவீன கேமராக்கள், சுவைப் எந்திரம், ஸ்கிம்மர் பேட்டரிகள், ஒரு புளூ டூத் மற்றும் ரூ.10 லட்சம் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    Next Story
    ×