search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் இருந்து மேலும் ஒரு எம்.எல்.ஏ. தெலுங்கு தேசம் கட்சிக்கு தாவினார்
    X

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் இருந்து மேலும் ஒரு எம்.எல்.ஏ. தெலுங்கு தேசம் கட்சிக்கு தாவினார்

    ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் இருந்து மேலும் ஒரு எம்.எல்.ஏ. ஆளுங்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார்.
    அமராவதி:

    ஆந்திர மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரசைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கடந்த ஆண்டு முதல் ஆளுங்கட்சியான தெலுங்கு தேசம் கட்சிக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், கோர்ட்டில் வழக்கு இருப்பதால், சபாநாயகர் தனது முடிவை அறிவிக்காமல் உள்ளார்.

    இந்நிலையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசைச் சேர்ந்த பதேரு தொகுதி எம்.எல்.ஏ. கிட்டி ஈஸ்வரி இன்று தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். அவரை முதல்வர் சந்திரபாபு நாயுடு முறைப்படி வரவேற்று வாழ்த்தினார்.

    இதுபற்றி கிட்டி ஈஸ்வரி கூறுகையில், ‘தெலுங்கு தேசம் கட்சியில் சேருவதற்காக நான் 25 கோடி ரூபாய் பெற்றதாக அவர்கள் (ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்) குற்றம்சாட்டுகிறார்கள். அது முற்றிலும் பொய். நான் ஒரு ஆசிரியை, நெறிமுறைகளைப் பின்பற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவள். எனக்கு பணம் வழங்கப்பட்டதாக கூறுவதில் உண்மையல்ல.

    ஜெகன் எங்கள் நம்பிக்கையை வீணடித்துவிட்டார். அதனால் தெலுங்குதேசம் கட்சியில் சேர முடிவு செய்தேன். பழங்குடியினரின் நலன்களை பாதுகாக்கும் வகையில், பாக்சைட் சுரங்கத்திற்கு அனுமதிக்கக் கூடாது என்ற ஒற்றை கோரிக்கையை முதல்வரிடம் வைத்துள்ளேன்’ என்றார்.

    தற்போதுவரை ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் இருந்து மொத்தம் 23 எம்.எல்.ஏ.க்கள் ஆளுங்கட்சிக்கு தாவி உள்ளனர். அவர்களில் ஒருவர் கடந்த மார்ச் மாதம் காலமானார். 4 பேர் சந்திரபாபு தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×