search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரணவ்
    X
    பிரணவ்

    கொல்லம் அருகே திருமண வீட்டில் தாலி கட்டியதும் பெண்ணிடம் கார் கேட்ட மாப்பிள்ளை கைது

    கொல்லம் அருகே திருமணம் முடிந்த அன்றே பெண்ணிடம் கார் கேட்ட மாப்பிள்ளையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவனந்தபுரம்:

    கொல்லத்தை அடுத்த கொய்தூர்கோணம், மன்னந்தாவை சேர்ந்தவர் பிரணவ் (வயது 30).

    பிரணவ்வுக்கும், கொல்லம் பரவூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் நேற்று திருமணம் நடந்தது. திருமண சடங்குகள் முடிந்து தாலி கட்டி விருந்து உபசாரங்கள் முடிந்ததும், மாப்பிள்ளை பிரணவ், புதுப்பெண்ணை அழைத்துக் கொண்டு அவரது வீட்டிற்கு சென்றார்.

    அங்கு புதுப்பெண்ணிடம், வரதட்சணையாக நான் கேட்ட கார் எங்கே? என்று கேட்டார். அதிர்ச்சி அடைந்த புதுப்பெண், உங்கள் வீட்டில் காரை நிறுத்த இடம் இல்லாததால், அதனை எங்கள் வீட்டில் நிறுத்தி உள்ளோம். அங்கு போனால் நீங்கள் காரை பார்க்கலாம், என்றார்.

    புதுப்பெண்ணின் பதிலில் மாப்பிள்ளை பிரணவ்வுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நம்பிக்கை இல்லை. எனவே அவர்கள் புதுப்பெண்ணிடம் மீண்டும் இதுபற்றி விவாதம் செய்தனர்.

    மேலும் காரின் சாவியை தருமாறு கேட்டனர். இதனால் மணப்பெண் மனம் உடைந்தார். பின்னர் அவர், அங்குள்ள ஒரு அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டார்.

    இதற்கிடையே பெண் வீட்டார், வீடு காணும் நிகழ்ச்சிக்காக சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக மாப்பிள்ளை வீட்டிற்கு வந்தனர்.

    அங்கு சீர்வரிசை பொருட்களை மாப்பிள்ளை வீட்டாரிடம் கொடுத்து விட்டு பெண்ணை அழைத்து பேசினர். அப்போது புதுப்பெண், மாப்பிள்ளை கார் கேட்டு தகராறு செய்ததை கூறி அழுதார். திருமணம் முடிந்த அன்றே மகளை, மாப்பிள்ளை அழ வைத்தது பெண்ணின் தந்தைக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    அவர், மாப்பிள்ளையின் தந்தையிடம் இதுபற்றி கேட்டார். இதில் அவருக்கும், மாப்பிள்ளை வீட்டாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தகராறு முற்றி பிரச்சனை பெரிதானது.

    எனவே பெண்ணின் பெற்றோர் இதுபற்றி போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மாப்பிள்ளை, அவரது தந்தை, சகோதரர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இதில், மாப்பிள்ளை பிரணவ் கைது செய்யப்பட்டார். திருமணம் முடிந்த அன்றே மாப்பிள்ளை கைதாகி ஜெயிலுக்கு சென்றதால் புதுப்பெண்ணை பெற்றோர் அழைத்துச் சென்றனர்.
    Next Story
    ×