search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவா திரைப்பட விழாவில் எஸ்.துர்கா படத்துக்கு தடை விதிக்க கேரள ஐகோர்ட் மறுப்பு
    X

    கோவா திரைப்பட விழாவில் எஸ்.துர்கா படத்துக்கு தடை விதிக்க கேரள ஐகோர்ட் மறுப்பு

    கோவா திரைப்பட விழாவில் எஸ்.துர்கா படத்தை திரையிட அனுமதி அளித்த நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க கேரள ஐகோர்ட் அமர்வு இன்று மறுப்பு தெரிவித்துள்ளது.
    கோவா தலைநகர் பனாஜியில் மத்திய அரசின் சார்பில் 48-வது சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. சுமார் 200 படங்கள் இந்த விழாவில் திரையிடப்படுகிறது.

    இந்த விழாவில் திரையிடப்படுவதற்கான இந்திய திரைப்படங்கள், மற்றும் விருதுக்குரிய திரைப்படங்களை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நடுவர் பரிந்துரைக்கப்பட்ட படங்களின் பட்டியல் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு கடந்த செப்டம்பர் மாதம் அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த பட்டியலில் இடம்பெற்றிருந்த ‘எஸ். துர்கா’ என்ற மலையாளப் படம் மற்றும் ‘நியூட்’ (நிர்வாணம்) என்ற மராத்தி மொழிப் படம் ஆகிவற்றை நீக்கம் செய்து திரையிடப்படும் இந்திய படங்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது.

    இது தேர்வுக்குழு தலைவர் மற்றும் நடுவர்களில் சிலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கோவா திரைப்பட விழா தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து பிரபல பாலிவுட் இயக்குநர் சுஜோய் கோஷ் விலகினார். அவரை தொடர்ந்து மேலும் இரு உறுப்பினர்களும் பதவி விலகியதால் கோவா திரைப்பட விழா தொடர்பாக சர்ச்சை தொடங்கியது.

    இதற்கிடையில், தனது இயக்கத்தில் வெளியான ‘எஸ். துர்கா’ என்ற மலையாளப் படத்தை தேர்வு பட்டியலில் இருந்து நீக்கியது தொடர்பாக மத்திய  தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் முடிவை எதிர்த்து அப்படத்தின் இயக்குநர் சனல் குமார் சசிதரன் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.



    இவ்வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட்டு, இந்திய திரைப்படங்கள் பட்டியலில் ‘எஸ் துர்கா’ திரைப்படத்தையும் சேர்த்து திரையிட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

    இதே எஸ் துர்கா திரைப்படம் ‘செக்ஸி துர்கா’ என்ற பெயரில் சில சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்றது. ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்று வரும் ஆசியா பசிபிக் திரை விருதுக்கான திரைப்பட விழாவிலும் இப்படம் இடம்பெறுகிறது.

    இவ்விழாவில் சிறந்த இயக்குநருக்கான பட்டியலில் எஸ் துர்கா பட இயக்குநர் சனல் குமார் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில், கோவா திரைப்பட விழாவில் எஸ் துர்கா படத்தை திரையிட வேண்டும் என கேரள ஐகோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசின் சார்பில் கேரள ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

    இந்த மனு (விடுமுறைக்கால தற்காலிக) நீதிபதி அந்தோணி டோம்னிக் முகம்மது முஸ்தாக் கொண்ட அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது.

    கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா வரும் 28-ம் தேதி முடிவடைவதால் இறுதி செய்யப்பட்ட பட்டியலை மாற்றுவதும், எஸ்.துர்கா படத்தை இணைப்பதும் சாத்தியமற்றது என்பதால் முன்னர் கேரள ஐகோர்ட்டின் நீதிபதி அளித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவினை இன்று ரத்து செய்த ஐகோட்டு அமர்வு, முன்னர் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை  விதிக்க மறுத்து விட்டது.

    Next Story
    ×