search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வன ஊழியர்களுக்கு நன்றி கூறிய தாய் யானை
    X
    வன ஊழியர்களுக்கு நன்றி கூறிய தாய் யானை

    கிணற்றில் விழுந்த குட்டியானை மீட்பு: வன ஊழியர்களுக்கு நன்றி கூறிய தாய் யானை - வீடியோ இணைப்பு

    கேரளாவில் 20 அடி ஆழ கிணற்றில் விழுந்த குட்டியானையை மீட்ட வன ஊழியர்களுக்கு தாய் யானை துதிக்கையை உயர்த்தி நன்றி கூறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் எர்ணா குளம் மாவட்டம் கோதமங்கலம்- உருளும் தண்ணி ரோடு அருகே உள்ளது ஜோமோன் என்பவருக்கு சொந்தமான ரப்பர் தோட்டம். இந்த தோட்டத்தில் 20 அடி ஆழ கிணறு உள்ளது. அதில் 3 அடிக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது.

    நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து 2 குட்டி உள்பட 5 யானைகள் வந்தன. அதில் 5 வயது மதிக்கத்தக்க குட்டியானை மட்டும் அங்குமிங்கும் ஓடியது. அப்போது 20 அடி கிணற்றில் அந்த குட்டி யானை தவறி விழுந்தது. தவறி விழுந்த குட்டியானை அலறி சத்தம்போட்டது.



    அதிர்ச்சியடைந்த மற்ற யானைகள் கிணற்றுக்கு அருகே வந்து துதிக்கையை நீட்டி காப்பாற்ற முயன்றது. சுவர் கட்டப்படாத அந்த கிணற்றின் பக்கவாட்டு பகுதியில் இருந்த மண் யானைகளின் பாரங்களுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இடிந்து விழுந்தன. ஆபத்தை உணர்ந்த காட்டுயானைகள் பிளிறியது.

    யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டு தோட்ட உரிமையாளர் ஜோமோன் அங்கு வந்தார். தோட்ட உரிமையாளர் வந்ததும் கிணற்று பகுதியில் சுற்றியிருந்த யானைகள் அருகில் உள்ள ஆற்றுப்பகுதிக்கு சென்றன. தோட்ட உரிமையாளர் கிணற்றை எட்டிப்பார்த்தபோது குட்டியானை உயிருக்கு போராடியது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். கிணற்றில் இருந்து குட்டி யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    ஆனால் போதிய வெளிச்சம் இல்லாததால் யானையை மீட்கும் முயற்சியை கைவிட்டனர். ஆற்று ஓரமாக நின்ற யானைகள் வனத்துறையினரை பார்த்து பிளிறியது.

    விடிந்ததும் வன ஊழியர்கள் பொக்கலைன் எந்திரத்தை கொண்டு வந்தனர். அதே சமயம் பொதுமக்களும் அங்கு திரண்டனர்.கிணற்றின் பக்கவாட்டில் குழிதோண்டி குட்டியானை வெளியே வருமாறு மண்ணை சமன் செய்தனர். பின்னர் கயிறு கட்டி குட்டி யானையை மெல்ல மெல்ல தோண்டப்பட்ட வழியே இழுத்து வந்தனர். சமன்படுத்தப்பட்ட மண் வழியே குட்டி யானை கரையேறியது.


                                        கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குட்டி யானை

    உயிர் பிழைத்த மகிழ்ச்சியில் குட்டியானை ஆற்றங்கரையோரம் நின்ற தாய் யானையிடம் ஓடி தழுவியது. பின்னர் அங்குள்ள ஆற்றில் துள்ளிகுத்தித்து மகிழ்ந்தது. பின்னர் வன ஊழியர்களை பார்த்து தாய் யானை தனது துதிக்கையை 3 முறை உயர்த்தி காட்டி நன்றி கூறியது. வனத்துறையினரும் கையசைத்து பிரியா விடை கொடுத்தனர்.

    அதன்பின்னர் யானைகள் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இதனை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.


    Next Story
    ×