search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே.நகர். தொகுதி இடைத்தேர்தல் தேதி நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்
    X

    ஆர்.கே.நகர். தொகுதி இடைத்தேர்தல் தேதி நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்

    ஆர்.கே.நகர். தொகுதி இடைத்தேர்தல் தேதி நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக இந்திய தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    புதுடெல்லி:

    ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி மரணம் அடைந்ததால், அவர் எம்.எல்.ஏ. ஆக தேர்வாகி இருந்த சென்னை ஆர்.கே.நகர் தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டது.

    காலியாக உள்ள சட்டசபை தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும். அதன் பேரில் ஏப்ரல் 12-ந்தேதி ஓட்டுப்பதிவு நடத்தும் வகையில் இடைத்தேர்தல் அட்டவணையை தலைமை தேர்தல் கமி‌ஷன் வெளியிட்டிருந்தது.



    தேர்தலில் அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் டி.டி.வி.தினகரன், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் முன்னாள் அமைச்சர் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ், பா.ஜ.க. சார்பில் கங்கை அமரன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா ஆகியோர் களம் இறங்கினார்கள். இதனால் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் களம் வழக்கத்தை விட படு சூடாக இருந்தது.

    ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு நூதனமான வழிகளில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் வருமான வரித்துறையினர் சென்னையில் 35 இடங்களில் திடீரென அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையில் சில ஆவணங்கள் சிக்கின. அதில் ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள 2.6 லட்சம் வாக்காளர்களில் சுமார் 85 சதவீதம் பேருக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டு இருப்பதற்கான ஆதாரம் சிக்கியது.



    அமைச்சர்கள் மேற்பார்வையில் ரூ.89 கோடி, வாக்காளர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டிருப்பது, அந்த ஆவணம் மூலம் தெரிய வந்தது. இதன் மூலம் ஒரு வாக்காளருக்கு தலா ரூ.4 ஆயிரம் பட்டுவாடா செய்யபட்டிருப்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை, தேர்தல் கமி‌ஷன் ரத்து செய்தது. இது தொடர்பாக 29 பக்க விளக்க அறிக்கையை வெளியிட்டது.

    கடந்த அக்டோபர் 12-ம் தேதி சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நீதிமன்ற உத்தரவுப்படி டிசம்பர் 31-ம் தேதிக்குள் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையருடன் ஆலோசனை நடத்துவதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி டெல்லி சென்றுள்ளார். நாளை இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

    நாளை நடைபெற உள்ள தேர்தல் ஆணைய கூட்டத்திற்கு பின்னர் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தேர்தல் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
    Next Story
    ×