search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாக். சிறையில் வாடும் கணவரை பார்க்க வரும் குல்பூஷன் ஜாதவ் மனைவிக்கு உரிய பாதுகாப்பு: இந்தியா கோரிக்கை
    X

    பாக். சிறையில் வாடும் கணவரை பார்க்க வரும் குல்பூஷன் ஜாதவ் மனைவிக்கு உரிய பாதுகாப்பு: இந்தியா கோரிக்கை

    பாகிஸ்தான் சிறையில் வாடி வரும் இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவை பார்க்க வரும் அவரது மனைவிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்புபூஷன் ஜாதவ் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உளவு பார்த்ததாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த நிலையில் ராணுவ கோர்ட்டு அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறியிருந்தது. ஆனால், குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனைக்கு சர்வதேச நீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது.

    மேலும், குல்பூஷன் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யக் கோரிய மனுவை பாகிஸ்தான் ராணுவ தளபதியும், 
    ராணுவ கோர்ட்டும் நிராகரித்து விட்டது.

    இதற்கிடையே, குல்பூஷன் ஜாதவை அவரது மனைவி சந்திக்க பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சகம் கடந்த 10-ம் தேதி அனுமதி அளித்துள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தான் சிறையில் வாடி வரும் இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவை பார்க்க வரும் அவரது மனைவிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக, வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் கூறியதாவது:

    பாகிஸ்தான் சிறையில் வாடி வரும் குல்பூஷன் ஜாதவை பார்க்க அவரது மனைவிக்கு பாக். அரசு அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே, குல்பூஷனின் தாயார் அளித்திருந்த மனு நிலுவையில் உள்ளது.

    பாகிஸ்தான் சிறையில் வாடி வரும் குல்பூஷன் யாதவை அவரது மனைவி மற்றும் அவரது தாயார் சந்திக்க செல்கின்றனர். எனவே, இரு நாடுகளுக்கு உள்ள இறையாண்மையை மதித்து பாகிஸ்தான் வரும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.

    ரஷ்யாவில் உள்ள சோச்சி பகுதியில் ஷாங்காய் கூட்டமைப்பு உச்சி மாநாடு நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்கிறார்.

    மேலும், டெல்லியில் டிசம்பர் 11-ம் தேதி சீனா, ரஷ்யா மற்றும் இந்திய வெளியுறவு துறை மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனைகள் நடக்கவுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×