search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி. உள்ளாட்சி தேர்தலில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு ஓட்டு - எந்திரத்தில் தில்லுமுல்லு என புகார்
    X

    உ.பி. உள்ளாட்சி தேர்தலில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு ஓட்டு - எந்திரத்தில் தில்லுமுல்லு என புகார்

    உத்தரபிரதேசம் மாநிலம் மீரட் நகர உள்ளாட்சி தேர்தலில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்துக்கு ஓட்டு விழும் வகையில், வாக்கு எந்திரத்தில் தில்லுமுல்லு நடைபெற்றுள்ளது என்று அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
    மீரட்:

    உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று உள்ளாட்சி தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மீரட் மாநகராட்சி தேர்தல் வாக்குபதிவின் போது ஒரு வாக்குசாவடியில் உள்ள எந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாரதிய ஜனதா கட்சியின் சின்னமான தாமரைக்கு ஓட்டு விழுந்தது.

    பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவாளரான தஸ்லிம் அகமது என்பவர் ஓட்டு போட்ட போது, அந்த ஓட்டு பாரதிய ஜனதாவுக்கு பதிவானது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து அதிகாரிகள் ஓட்டு எந்திரத்தை சோதனையிட்டனர். அவர் சொன்னது போலவே எந்த கட்சிக்கு ஓட்டு போட்டாலும் அது தாமரை சின்னத்துக்கு பதிவானது.

    உடனே பகுஜன் சமாஜ் கட்சியினரும், மற்ற எதிர்க்கட்சியினரும் வாக்குசாவடி முன்பு திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். ஓட்டு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்திருப்பதாக புகார் கூறினார்கள்.

    இதையடுத்து ஓட்டு பதிவு நிறுத்தப்பட்டது. உயர் அதிகாரிகள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அந்த ஓட்டு எந்திரத்தை மாற்றி விட்டு வேறு எந்திரத்தை வைத்து ஓட்டு பதிவை தொடர செய்தனர்.

    இந்த எந்திரத்தில் ஏற்கனவே ஓட்டு போட்டவர்களை வீடியோ மூலம் அடையாளம் கண்டு மறுபடியும் அவர்கள் ஆன்-லைன் மூலம் ஓட்டு போட ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



    இது சம்பந்தமாக மண்டல தேர்தல் அதிகாரி பிரபாத் குமார் கூறும் போது, ஓட்டு எந்திரத்தில் எந்த தில்லுமுல்லும் நடக்கவில்லை. எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் இப்படி நடந்து விட்டது.

    ஒரு நபர் ஓட்டு போட்டதும் எந்திரம் தானாக ‘லாக்’ ஆகிவிடும். அடுத்த நபர் ஓட்டு போடும் போது மீண்டும் செயல்படும். ஆனால், இந்த எந்திரம் கோளாறு காரணமாக தானாக லாக் ஆகவில்லை.

    எனவே தான் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு ஓட்டு விழுந்துள்ளது. இது, எந்திர கோளாறை தவிர வேறு எதுவும் இல்லை என்று கூறினார்.
    Next Story
    ×