search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை கருப்பந்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் காட்சி.
    X
    நெல்லை கருப்பந்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் காட்சி.

    நெல்லை மாவட்டத்தில் மழை: அணைகளில் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

    நெல்லை மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பாபநாசம் அணை நீர்மட்டம் மீண்டும் 100 அடியை தாண்டியது.
    நெல்லை:

    தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக சரிவர பெய்யாத பருவ மழை இந்த ஆண்டு முழுமையாக பெய்யும் என்று வானிலை இலாகா தெரிவித்திருந்தது. அதன்படி கடந்த வாரத்திற்கு முன்பாக தொடர்ந்து பெய்த மழையினால் அணைகள், குளங்களுக்கு தண்ணீர் வர தொடங்கியது. மாவட்டத்தில் உள்ள 12 அணைகளில் பிரதான பாசன அணையான பாபநாசம் அணை 100 அடியை தாண்டியது.

    மற்ற அணைகளில் குண்டாறு, கொடுமுடியாறு, நம்பியாறு அணைகள் நிரம்பின. அடவிநயினார் அணை, மணிமுத்தாறு அணைகளில் தண்ணீர் அதிக அளவு நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து பிசான சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மழை நின்று வெயில் அடிக்க தொடங்கியது. பின்னர் கடந்த 3 நாட்களாக மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது.

    இதனால் அணைகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் மீண்டும் 100 அடியை தாண்டியது. இந்த அணை நீர்மட்டம் நேற்று 99.45 அடியாக இருந்தது. இன்று இந்த அணை 100.10 அடியாக அதிகரித்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1573.72 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 704 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.

    இதே போல நேற்று 107.77 அடியாக இருந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 111.55 அடியாக உயர்ந்து உள்ளது. நேற்று 83.40 அடியாக இருந்த மணிமுத்தாறு அணை நீர்மட்டம் இன்று 84 அடியாகி உள்ளது. இதே போல நேற்று நேற்று 79 அடியாக இருந்த கடனா அணை நீர்மட்டம் இன்று 80 அடியாகவும், 64.50 அடியாக இருந்த ராமநதி அணை நீர்மட்டம் 65 அடியாகவும், 64.50 அடியாக இருந்த கருப்பாநதி அணை நீர்மட்டம் 64.96 அடியாகவும், 26.50 அடியாக இருந்த வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 27.50 அடியாகவும், 92 அடியாக இருந்த அடவிநயினார் அணை நீர்மட்டம் 92 அடியாகவும் அதிகரித்து உள்ளன.

    அணைப்பகுதி தவிர மாவட்ட பகுதிகளில் நேற்று அம்பை, பாளை, நெல்லை, சேரன்மகாதேவி பகுதிகளில் மிதமான மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் இன்று காலை வரை பதிவான மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:

    பாளை 33, சேரன்மகாதேவி 31.20, அம்பை 31, மணிமுத்தாறு 27, பாபநாசம் 24, நெல்லை 24, அடவிநயினார் அணை 13, நாங்குநேரி 12, ராமநதி 10, தென்காசி 8.40, கருப்பாநதி 8, ஆய்க்குடி 7.40, சேர்வலாறு 5, கடனா அணை 5, கொடுமுடியாறு 5, குண்டாறு 3, செங்கோட்டை 1.



    Next Story
    ×