search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அடுத்தடுத்து என்கவுண்டர் கொலை: உத்தரபிரதேச அரசுக்கு மனித உரிமை கமி‌ஷன் நோட்டீசு
    X

    அடுத்தடுத்து என்கவுண்டர் கொலை: உத்தரபிரதேச அரசுக்கு மனித உரிமை கமி‌ஷன் நோட்டீசு

    அடுத்தடுத்து நடந்துள்ள என்கவுண்டர் தொடர்பாக விரிவான அறிக்கையை தரும்படி உத்தரபிரதேச அரசுக்கு மனித உரிமை கமிஷன் நோட்டீசு அனுப்பி உள்ளது.
    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாரதீய ஜனதா அரசு அமைந்து 8 மாதங்கள் ஆகிறது.

    அவர் முதல்-மந்திரி ஆன பிறகு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் பெரிய அளவிலான கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை ஒடுக்க அதிரடி நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. இதனால் போலீஸ் என் கவுண்டர்களும் அடிக்கடி நடந்து வருகின்றன.

    யோகி ஆதித்யநாத் முதல்-மந்திரி ஆன பிறகு 22 கிரிமினல் குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேசத்தில் கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் ஒன்று ஜெயிலில் இருக்க வேண்டும் அல்லது மேலே இருக்க வேண்டும் என்று பேசினார்.

    அதாவது குற்றங்களில் ஈடுபடுபவர்கள் ஜெயிலில் அடைக்கப்படுவார்கள். அல்லது என் கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டு மேல் உலகத்துக்கு அனுப்பப்படுவார்கள் என்ற ரீதியில் இவ்வாறு பேசினார். இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே மத்திய மனித உரிமை கமி‌ஷனின் கண்காணிப்பு பிரிவு இந்த விவகாரத்தை தன்னிச்சையாக எடுத்து உத்தரபிரதேச அரசுக்கு நோட்டீசு அனுப்பி உள்ளது.



    அதில், இதுவரை நடந்த என்கவுண்டர் தொடர்பாக விரிவான அறிக்கையை தரும்படி கேட்டு கொண்டுள்ளது. இந்த நோட்டீசு மாநில தலைமை செயலாளருக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால், நோட்டீசில் முதல்-மந்திரியின் பேச்சு பற்றிய எந்த விவரங்களும் இடம்பெறவில்லை.

    நோட்டீசு வந்ததை அடுத்து மாநில டி.ஜி.பி. சுல்கான்சிங் அனைத்து உயர் போலீஸ் அதிகாரிகளையும் அழைத்து இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தினார்.

    இது தொடர்பாக போலீஸ் செய்தி தொடர்பாளர் ராகுல் ஸ்ரீவஸ்தவா கூறும் போது, உத்தரபிரதேசத்தில் எந்த விதிமுறைகளும் மீறப்படவில்லை. என் கவுண்டரில் கொல்லப்பட்ட அனைவரும் போலீசில் சரண் அடையாமல் போலீசாருடன் மோதியதால்தான் கொல்லப்பட்டனர்.



    ஒவ்வொரு என்கவுண்டர் நடந்த போதும் அது பற்றிய தகவல்களை மனித உரிமை அமைப்புக்கு நாங்கள் முறைப்படி தெரிவித்து இருக்கிறோம். இப்போது அனுப்பப்பட்டுள்ள நோட்டீசுக்கும் உரிய பதில்களை அனுப்புவோம் என்று கூறினார்.
    Next Story
    ×