search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி. உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போட வந்த 2 வயது சிறுவன்
    X

    உ.பி. உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போட வந்த 2 வயது சிறுவன்

    உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் 2 வயது சிறுவன் பெயர் இடம் பெற்றிருந்ததால், ஓட்டு போடுவதற்காக வாக்குச்சாவடிக்கு சிறுவன் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    மீரட்:

    உத்தரபிரதேச மாநிலத்தில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. நேற்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்தது.

    மீரட் நகர மாநகராட்சிக்கும் நேற்று ஓட்டு பதிவு நடந்தது. அங்குள்ள 50-வது வார்டுக்கான வாக்குசாவடி எல்.ஐ.சி. அலுவலகத்தில் அமைக்கப்பட்டு இருந்தது.

    அந்த வாக்குசாவடியில் ஓட்டு போடுவதற்காக ஹனிபத்ரா என்பவர் தனது மனைவியுடன் வந்தார். மேலும் தனது 2 வயது மகன் யுவன் பத்ராவையும் உடன் அழைத்து வந்தார். யுவன் பத்ரா தனது தந்தையின் தோளில் அமர்ந்தபடி வாக்குசாவடிக்கு வந்தான்.

    முதலில் கணவன்- மனைவி இருவரும் வாக்குசாவடி அதிகாரியிடம் அடையாள அட்டையை காட்டி ஓட்டு போடுவதற்கு அனுமதி பெற்றனர். பின்னர் 2 வயது சிறுவன் யுவன் பத்ராவுக்கும் ஓட்டு இருப்பதாக கூறி அவனையும் ஓட்டு போட அனுமதிக்கும்படி அதிகாரியிடம் கேட்டனர்.

    வாக்காளர் பட்டியலை சரிபார்த்த அதிகாரி அதில் யுவன் பத்ரா பெயர் இருப்பதை பார்த்தார். இதனால் அவனை ஓட்டுபோட அனுமதித்தார். அவன் ஓட்டு போடுவதற்கு தயாரானான்.

    அப்போது உயர் அதிகாரி விவேக் பிசோனி இதை கவனித்து விட்டு 2 வயது சிறுவனுக்கு எப்படி ஓட்டு இருக்க முடியும்? என்று கேட்டு பெற்றோரிடம் விசாரித்தார். சிறுவனை ஓட்டு போட அனுமதிக்க முடியாது என்று அந்த அதிகாரி கூறினார்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கும் போது ஏன் ஓட்டு போட அனுமதிக்க கூடாது என்று கூறி சிறுவனின் தந்தை ஹனிபத்ரா தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    ஆனாலும், கடைசி வரை சிறுவனை ஓட்டு போட அனுமதிக்கவில்லை. சிறுவன் யுவன் பத்ராவுக்கு வாக்காளர் அடையாள அட்டை இல்லை. ஆனால், பிறந்த நாள் பதிவை வைத்து கொண்டு அதன் அடிப்படையில் ஓட்டு போட அவனது தந்தை அழைத்து வந்திருந்தார்.

    தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி 16 விதமான ஆவணங்களை காட்டி ஓட்ட போட முடியும். ஆனால் பிறப்பு சான்றிதழை வைத்து ஓட்டு போட முடியாது.

    இந்தியாவில் 18 வயது நிரம்பியவர்கள் தான் வாக்காளர் பட்டியலில் இடம்பெற முடியும். ஏராளமான ஆவணங்களை சான்றாக கொடுத்துதான் இந்த பட்டியலில் சேர முடியும். ஆனால், 2 வயது சிறுவனுக்கு எந்த ஆதாரத்தை வைத்து வாக்காளர் பட்டியலில் இடம் அளித்தார்கள்? என்று தெரியவில்லை.

    இது சம்பந்தமாக வாக்குசாவடி அதிகாரி விவேக் பிசோனி கூறும்போது, வாக்காளர் பட்டியல் தயாரித்த போது ஏதோ தவறுதலாக சிறுவனின் பெயர் இடம்பெற்றுள்ளது. ஆனால், வாக்காளர் பட்டியலில் அவனது வயது 19 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது என்று கூறினார்.
    Next Story
    ×