search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: சுகேஷ் சந்திரசேகரின் கூட்டாளி டெல்லியில் கைது
    X

    தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: சுகேஷ் சந்திரசேகரின் கூட்டாளி டெல்லியில் கைது

    இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகரின் கூட்டாளி டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
    புதுடெல்லி:

    இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லியைச் சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 30 லட்சம் கைப்பற்றப்பட்டது.



    சுகேஷ் சந்திரசேகரை தொடர்ந்து அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, ஹவாலா ஏஜெண்டு நரேஷ் என்ற நத்துசிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    கைதான அனைவரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் சுகேஷ் சந்திரசேகர் தவிர மற்ற அனைவரும் ஜாமீனில் விடுதலை ஆனார்கள். சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீன் கிடைக்காததால் அவர் தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார்.

    இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே சுகேஷ் சந்திரசேகரின் கூட்டாளி என்று சந்தேகிக்கப்படும் ஹவாலா ஏஜெண்டு புல்கித் குந்த்ரா உள்ளிட்ட சிலரிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    இந்த நிலையில், புல்கித் குந்த்ராவை டெல்லியில் குற்றப்பிரிவு போலீசார் இப்போது கைது செய்து உள்ளனர். லஞ்சப்பணத்தில் கணிசமான பணத்தை புல்கித் குந்த்ரா பெற்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×