search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மராட்டிய மாநிலத்திற்கு பதிலாக 160 கி.மீ. வழிமாறி மத்தியப்பிரதேசம் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில்
    X

    மராட்டிய மாநிலத்திற்கு பதிலாக 160 கி.மீ. வழிமாறி மத்தியப்பிரதேசம் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில்

    டெல்லியில் இருந்து மராட்டிய மாநிலம் செல்ல வேண்டிய ரெயில் 160 கிலோமீட்டர் தூரம் தவறாக வழி மாறி மத்திய பிரதேச மாநிலத்திற்கு சென்றுள்ளது.
    புதுடெல்லி:

    மஹாராஷ்டிராவை சேர்ந்த 2500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இரண்டு நாட்களுக்கு முன்னர் டெல்லிக்கு வந்தனர். இவர்கள் பல மாநில விவசாயிகளுடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். கடன் தொல்லை, விலைவாசி உயர்வு, புதிய திட்டங்கள் என பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடந்தது.

    இந்த நிலையில் நேற்று போராட்டத்தை முடித்துகொண்டு அனைவரும் டெல்லியில் இருந்து மஹாராஷ்டிரா செல்வதற்காக ஸ்வாபிமணி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணித்து இருக்கிறார்கள். இதில் 200 பெண்களும் அடங்குவர். இந்த ரெயில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் செல்வதற்காக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

    இந்த ஸ்வபிமணி எக்ஸ்பிரஸ் டெல்லியில் இருந்து மஹராஷ்டிரா செல்ல வேண்டியது. ஆனால் இந்த ரெயில் சுமார் 160 கிலோ மீட்டர் தவறான வழியில் சென்று இருக்கிறது. மேலும் ரெயிலில் இருந்த ஊழியர்களுக்கு கூட இந்த விஷயம் தெரியாமல் இருந்திருக்கிறது. இந்த நிலையில் அந்த ரெயில் மத்தியபிரதேசத்தை அடைந்த பின்பே ரெயில் வழி மாறி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து வழி தவறி சென்றது குறித்து விவசாயிகளிடம் சரியான விளக்கத்தை அளிக்க ரெயில்வே அதிகாரிகள் மறுத்து இருக்கின்றனர். ஆகவே விவசாயிகள் அதே இடத்தில் மீண்டும் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் வலுவடைந்ததை அடுத்து ரெயில்வே நிர்வாகம் சமாதானம் செய்ய முயன்றது. அதன்பின் அவர்களுக்கு வேறொரு ரெயில் ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்த சம்பவத்திற்கு சரியான காரணம் இதுவரை ரெயில்வே நிர்வாகத்திடமிருந்து தெரிவிக்கப்படவில்லை. ரெயில் டிராக்குகள் தவறாக மாற்றப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து தீவிர விசாரணையை தொடங்க ரெயில்வே நிர்வாகம் ஆணையிட்டுள்ளது. இதனால் பெரிய அளவில் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×