search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு கூலி நிர்ணயம் செய்ய கொள்கை வடிவத்துக்கு அரசு ஒப்புதல்
    X

    மத்திய பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு கூலி நிர்ணயம் செய்ய கொள்கை வடிவத்துக்கு அரசு ஒப்புதல்

    மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கூலி நிர்ணயம் செய்யும் கொள்கை வரைமுறைக்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
    புதுடெல்லி:

    மத்திய அரசின் கட்டுப்பாட்டில் நாடு முழுவதும் 320 பொதுத்துறை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 12.34 பணியாளர்கள் உள்ளனர். அவர்களில் 2.99 லட்சம் பேர் நிர்வாக பொறுப்பாளர்கள், கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகளாகவும், சுமார் 9.34 லட்சம் பேர் தொழிற்சங்களை சேர்ந்த தொழிலாளர்களாகவும் வேலை செய்து வருகின்றனர்.

    ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகள் வெளியான பின்னர் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றும் தொழிற்சங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கான உயர்த்தப்பட்ட கூலியை நிர்ணயம் செய்ய ஒரு கொள்கை முடிவை வரையறுக்க வல்லுனர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டது.

    இந்த குழு பரிந்துரைத்த கொள்கை வரைமுறைக்கு பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இதன்படி, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதியை இறுதி நாளாக கணக்கிட்டு, தொழிலாளர்களின் பணிக்காலத்தில் ஐந்தாண்டு மற்றும் பத்தாண்டு என்ற பணிமூப்பு அடிப்படையிலான பாகுபாட்டின்படி அவர்களுக்கான புதிய கூலியை நிர்ணயம் செய்வதற்காக தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரம் அந்தந்த பொதுத்துறை நிறுவனத்தின் தலைமை பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    ஒவ்வொரு பொதுத்துறை நிறுவனத்தின் நிதியாதாரத்தை கொண்டு இந்த புதிய கூலி நிர்ணயத்துக்கான பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும். அந்த நிறுவனங்களின் துறைசார்ந்த மத்திய அமைச்சகத்தின் ஒப்புதலுடன் உயர்த்தப்பட்ட கூலி அளிக்கப்படலாம். இவ்விவகாரத்தில் மத்திய அரசு தரப்பில் இருந்து தனியாக நிதியுதவி ஏதும் அளிக்கப்பட மாட்டாது.

    சில நிறுவனங்களை தவிர உற்பத்தி அடிப்படையில் கூலி உயர்வு நிர்ணயம் செயப்பட கூடாது. 1-1-2017 தேதியை அடிப்படையாக  கணக்கிட்டு உயர்த்தப்பட்ட கூலி அளிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இந்த கொள்கை வடிவத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×