search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பத்மநாபசுவாமி கோவிலில் கமாண்டோ பாதுகாப்பு குறைப்பு - பக்தர்கள் சங்கம் எதிர்ப்பு
    X

    பத்மநாபசுவாமி கோவிலில் கமாண்டோ பாதுகாப்பு குறைப்பு - பக்தர்கள் சங்கம் எதிர்ப்பு

    பத்மநாபசுவாமி கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் திடீரென்று குறைக்கப்பட்டுள்ளதற்கு பத்மநாப சுவாமி கோவில் பக்தர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது.
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தில் மிகவும் பழமையும், பிரசித்தியும் பெற்ற பத்மநாபசுவாமி கோவில் உள்ளது.

    இந்த கோவிலின் ரகசிய நிலவறைகளில் கணக்கிட முடியாத அளவிற்கு தங்க, வைர நகைகள் அடங்கிய புதையல் கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள ஒரு பெரிய நிலவறை மட்டும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. அந்த நிலவறையிலும் ஏராளமான புதையல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புதையல்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து பத்மநாபசுவாமி கோவிலுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள், நவீன சுழலும் கேமராக்கள், கமாண்டோ வீரர்கள் ரோந்து பணி என்று பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக காணப்பட்டது.

    இந்த நிலையில் பத்மநாப சுவாமி கோவிலில் செய்யப்பட்டு இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில அரசு குறைத்துள்ளது.

    பத்மநாபசுவாமி கோவிலின் 4 பகுதியிலும் தலா 8 கமாண்டோ வீரர்கள் வீதம் 32 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது அது 8 கமாண்டோ வீரர்களாக குறைக்கப்பட்டு உள்ளது. மாநில போலீசாரும் 3 பேராக குறைக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் 8 ஷிப்டுகளாக கமாண்டோ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தது தற்போது 4 ஷிப்டுகளாக குறைக்கப்பட்டு உள்ளது.

    பத்மநாபசுவாமி கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் திடீரென்று குறைக்கப்பட்டுள்ளதற்கு பத்மநாப சுவாமி கோவில் பக்தர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது. காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் அளிக்கப்பட்ட பாதுகாப்பை தற்போது கம்யூனிஸ்டு ஆட்சியில் குறைத்து இருப்பது ஏன்? என்று அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் இதுதொடர்பாக பக்தர்கள் சங்க கூட்டத்தை கூட்டி அடுத்தகட்ட முடிவு பற்றி ஆலோசிக்கப்போவதாகவும் அவர்கள் கூறி உள்ளனர்.

    Next Story
    ×