search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-மந்திரிக்கு வழிவிட ஆம்புலன்ஸ் நிறுத்தம்: பெண் நோயாளியை நடந்தே அழைத்துச்சென்றனர்
    X

    முதல்-மந்திரிக்கு வழிவிட ஆம்புலன்ஸ் நிறுத்தம்: பெண் நோயாளியை நடந்தே அழைத்துச்சென்றனர்

    பெங்களூருக்கு முதல்-மந்திரி சித்தராமையா செல்ல அனைத்து வாகனங்களையும் நிறுத்தியதால் கூட்ட நெரிசலில் சிக்கிய ஆம்புலன்சில் இருந்த பெண் நோயாளியை ஊழியர்கள் நடந்தே அழைத்துச் சென்றனர்.
    பெங்களூர்:

    கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூர் புறநகர் பகுதியான நாக மங்கலாவில் வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி விட்டு பெங்களூருக்கு காரில் வந்து கொண்டிருந்தார்.

    அவரது காருக்கு முன்னும் பின்னும் போலீஸ் அதிகாரிகள், பாதுகாப்பு வாகனங்கள், மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் என அணிவகுத்து சென்றனர். முதல்-மந்திரி காருக்கு வழிவிட அனைத்து வாகனங்களையும் போலீசார் நிறுத்தி வைத்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.

    இதில் ஒரு பெண் நோயாளியை ஏற்றிக் கொண்டுவந்த ஆம்புலன்சும் சாலையோரம் நிறுத்தப்பட்டது. அதில் ஒரு பெண் நோயாளியும் அவரது கணவர் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 2 பேரும் இருந்தனர். வாகனங்கள் ஆங்காங்கே நின்றிருந்ததால் அதில் ஆம்புலன்ஸ் சிக்கிக் கொண்டு நகர முடியவில்லை.

    ஆனால் 500 மீட்டர் தொலைவில் அரசு மருத்துவமனை உள்ளது. இதையடுத்து பெண் நோயாளியை கணவரும் ஆம்புலன்ஸ் ஊழியரும் நடந்தே அழைத்துச் சென்றனர். அருகில் சாலை வெறிச்சோடிக் கிடக்க பெண்ணை கைத்தாங்கலாக அழைத்துச் செல்கிறார்கள்.


    இந்த காட்சியை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். அது கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    முதல்-மந்திரி வாகனம் செல்ல ஆம்புலன்ஸ்சை நிறுத்துவதா? போலீசார் கண்டு கொள்ளாதது ஏன்? என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

    இதுபற்றி மாண்டியா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதிகா கூறுகையில், ‘பெண்ணை அழைத்து வந்த ஆம்புலன்ஸ் வாகன நெரிசலில் சிக்கிக்கொண்டது. அதன்பிறகு ஒரு ஆட்டோவில் ஏற்றிச் சென்றார். அதுவும் செல்ல முடியவில்லை. அருகில் 500 மீட்டர் தொலைவில் ஆஸ்பத்திரி இருந்ததால் அங்கு அனுமதிக்கச் செய்தோம்’ என்றார்.

    அந்தப் பெண்ணுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சில மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
    Next Story
    ×