search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் விவசாயிகள் 2-வது நாளாக போராட்டம்
    X

    டெல்லியில் விவசாயிகள் 2-வது நாளாக போராட்டம்

    விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நேற்று 2-வது நாளாக போராட்டம் நடத்தினார்கள்.
    புதுடெல்லி:

    விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு பதிலாக குறைந்தபட்ச உத்தரவாத விலை நிர்ணயம் செய்ய வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் டெல்லியில் நேற்று முன்தினம் போராட்டம் தொடங்கியது.

    இந்த போராட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து பி.ஆர்.பாண்டியன், அய்யாக்கண்ணு, இளங்கீரன் ஆகியோரது தலைமையிலான சங்கங்கள் உள்பட பல மாநிலங்களில் இருந்து 182 விவசாய சங்கங்கள் பங்கேற்றன. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் டெல்லியில் திரண்டுள்ளனர். ஜந்தர்மந்தரில் போராட தடை விதிக்கப்பட்டுள்ளதால் இவர்களது போராட்டம் அருகில் உள்ள பாராளுமன்றம் தெருவில் நடைபெற்றது. நேற்று 2-வது நாளாக போராட்டம் நடந்தது.

    நேற்றைய போராட்டத்திலும் விவசாய சங்க தலைவர்களுடன் சமூகசேவகி மேதாபட்கர் அமர்ந்திருந்தார். போராட்டம் தொடங்கியதும் கன்னியாகுமரி களரிமுரசு கலைக்குழு சார்பில் தப்பாட்டம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பெண் கலைஞர்களும் பங்கேற்றனர். பின்னர் விவசாய சங்க தலைவர்கள் பேசினார்கள்.

    அய்யாக்கண்ணு பேசும்போது, ‘எங்களது கோரிக்கைகளை வெல்ல நாங்கள் சண்டை போடவில்லை, அழுகிறோம். ஆனால் அரசு எங்களுக்கு லாபகரமான விலை தரமறுக்கிறது. பிரதமர் மோடியே எங்களது கோரிக்கையை நிறைவேற்றுங்கள். இல்லாவிட்டால் குஜராத்துக்கு திரும்பிவிடுங்கள். நாங்கள் இந்த நாட்டின் முதுகெலும்பு. இந்தியா முழுவதும் போராட்டங்களை தொடருவோம்’ என்றார்.



    விவசாயிகளின் இந்த போராட்டம் மாலைவரை நீடித்தது. போராட்டத்தை 2 நாட்களுடன் முடித்துக்கொள்ள வடஇந்திய விவசாய சங்க தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். ஆனால் தமிழக விவசாயிகள் இன்றும் (புதன்கிழமை) போராட்டத்தை தொடரப்போவதாக தெரிவித்தனர்.

    மேலும், தமிழக விவசாயிகளை குஜராத்துக்கு அழைத்துச்சென்று பா.ஜனதாவுக்கு எதிராக தேர்தல் பிரசாரம் செய்ய முடிவெடுத்து இருப்பதாகவும் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
    Next Story
    ×