search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க வங்கி காசோலைகளை ஒழிக்க மத்திய அரசு திட்டமா?
    X

    டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க வங்கி காசோலைகளை ஒழிக்க மத்திய அரசு திட்டமா?

    டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக வங்கி காசோலைகளை முற்றிலுமாக ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    டெல்லி:

    கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் உயர் மதிப்புடைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்னும் அறிவிப்பை வெளியிட்டார். மத்திய அரசின் இந்த திடீர் அறிவிப்பால் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டதோடு லட்சக்கணக்கானோர் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாமல் தவித்தனர்.

    இந்நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை போல அடுத்த அதிரடியான திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க உள்ளதாக அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பின் செயலாளர் பிரவீண் கந்தேல்வால் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற டிஜிட்டல் ரத் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இதனை தெரிவித்தார்.

    வங்கிகளில் பணப்பரிமாற்றத்திற்காக பயன்படுத்தப்படும் காசோலைகளை மத்திய அரசு முழுவதும் நிறுத்தக் கூடும் எனவும், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று அவர் கூறியுள்ளார்.

    வங்கிகள் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி செய்யும் பரிவர்த்தணைக்கு ஒரு சதவீதமும், கிரெடிட் கார்டை பயன்படுத்தி செய்யும் பரிவர்த்தணைக்கு 2 சதவீதமும் மட்டுமே கட்டணம் வசூலிக்கின்றன. அரசு இந்த பரிவர்த்தணையை ஊக்குவிக்கும் வகையில் கட்டணத்தை குறைக்க வங்கிகளுக்கு மானியம் அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

    தற்போதைய நிலவரப்படி 95 விழுக்காட்டு வர்த்தக நடவடிக்கைகள் ரூபாய் நோட்டுகள் அல்லது காசோலைகள் மூலமாகவே நடைபெற்று வருகின்றன. எனவே காசோலைகளை ரத்து செய்தால் மற்றொரு பணமதிப்பிழப்பு நடவடிக்கையாகவே இருக்கும் என கூறப்படுகிறது.

    பணமதிப்பிழப்பிற்குப் பிறகு டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனைகள் பெருமளவில் வளர்ச்சியடையவில்லை. எனினும் நவம்பர் 8, 2016க்கு முன்பு இருந்த நிலைமையை விட உயர்ந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
    Next Story
    ×