search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ம.பி., பஞ்சாபை தொடர்ந்து ராஜஸ்தானிலும் பத்மாவதி படத்துக்கு தடை: தீபிகா குடும்பத்துக்கு பாதுகாப்பு
    X

    ம.பி., பஞ்சாபை தொடர்ந்து ராஜஸ்தானிலும் பத்மாவதி படத்துக்கு தடை: தீபிகா குடும்பத்துக்கு பாதுகாப்பு

    மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் பத்மாவதி படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. படத்தின் நாயகி தீபிகாவின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    700 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வீரப்பெண்மணியான ராணி பத்மினிக்கு “பத்மாவதி” என்ற பெயரும் உண்டு. இந்த பெயரில் இந்தியில் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    “ஜோதா அக்பர்”, “பாஜிராவ் மஸ்தானி” ஆகிய சரித்திரப் படங்களை தயாரித்து வெற்றி கண்ட பிரபல டைரக்டர் சஞ்சய்லீலா பன்சாலி இந்த படத்தை தயாரித்துள்ளார்.

    பிரபல நடிகை தீபிகா படுகோனே ‘பத்மாவதி’ என்ற பெயரில் சித்தூர் ராணி பத்மினியாக நடித்துள்ளார். நடிகர்கள் ஷாகீத் கபூர், ரன்வீர் சிங் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் தயாரிப்பு பணிகள் தொடங்கிய போதே ரஜபுத்திரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். என்றாலும் அதையும் மீறி ‘பத்மாவதி’ படம் தயாரிக்கப்பட்டு வருகிற 1-ந்தேதி நாடெங்கும் வெளியாக இருந்தது.

    இந்த நிலையில் ராணி பத்மினியின் சிறப்பை சீர்குலைக்கும் வகையில் படம் தயாரிக்கப்பட்டு இருப்பதாக கூறி ரஜபுத்திரர்கள் இனத்தின் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அகில பாரதீய ‌ஷத்ரிய மகா சபை, கர்னி சேவா ஆகிய அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இதனால் சில இடங்களில் கலவரம் ஏற்பட்டது.

    சித்தூர் ராணி பத்மினியை தவறான முறையில் சித்தரித்து இருப்பதாக ரஜ புத்திரர்களிடம் குமுறல் ஏற்பட்டுள்ளது. அதாவது ராணி பத்மினி, முகமதிய மன்னன் அலாவுதீன் கில்சியுடன் காதல் கொண்டிருந்தது போல படத்தில் சித்தரிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ராணி பத்மினியாக நடித்த தீபிகா படுகோனே மீது அவர்களுக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது.

    நடிகை தீபிகா படுகோனேவை உயிருடன் எரிக்கும் நபருக்கு ரூ.1 கோடி பரிசு அளிக்கப்படும் என்று பாரதீய ‌ஷத்ரிய மகாசபை இளைஞர் அணி தலைவர் புவனேஸ்சிங் அறிவித்தார். மற்றொரு அமைப்பு தீபிகா தலையை துண்டிப்பவருக்கு ரூ.5 கோடி தர தயார் என்று அறிவித்தது. நேற்று முன்தினம் அரியானா மாநில பா.ஜ.க. தலைமை ஊடக ஒருங்கிணைப்பாளர் சுராஜ்பால் அமு வெளியிட்ட அறிவிப்பில் தீபிகா தலையை வெட்டினால் ரூ.10 கோடி பரிசு என்றார்.

    இத்தகைய சர்ச்சைகள் காரணமாக ‘பத்மாவதி’ திரைப்படம் வருகிற 1-ந் தேதி வெளியிடப்பட இருந்த நிலையில் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் ராணி பத்மினி தொடர்பான அனைத்து காட்சிகளையும் நீக்கி உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. ஆனால் அதை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு மனுவை நிராகரித்தது.

    ‘பத்மாவதி’ படத்துக்கு சென்சார் போர்டு இன்னமும் தணிக்கை சான்றிதழ் வழங்க வில்லை. சென்சார் போர்டு இது தொடர்பாக எந்த விளக்கத்தையும் வெளியிடாமல் மவுனம் சாதித்து வருகிறது. என்றாலும் ரஜ புத்திரர் அமைப்பினர் ‘பத்மாவதி’ படத்துக்கு தடை விதிக்க செய்யும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

    ராஜஸ்தான், மராட்டியம், குஜராத், மத்தியபிரதேசம், அரியானா, பஞ்சாபில் கணிசமாக வாழும் ரஜ புத்திரர்கள் தங்கள் பகுதியில் ‘பத்மாவதி’ படத்தை திரையிடக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். பா.ஜ.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் பத்மாவதி படத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

    படத்தை தடை செய்யக்கோரி அவர்கள் ‘‘பாராளுமன்ற மனுகுழு’’விடம் மனு அளித்துள்ளனர்.

    ரஜபுத்திர இனத்தவர்களின் கடுமையான எதிர்ப்பும், போராட்டங்களும் அரசியல் ரீதியாகவும் மாறுபட்ட கருத்துகளை உருவாக்கியுள்ளது. வட மாநில முதல்-மந்திரிகள் ரஜபுத்திரர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் பத்மாவதி படத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

    மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், பஞ்சாப் காங்கிரஸ் முதல்-மந்திரி கேப்டன் அம்ரீந்தர் சிங் ஆகியோர் தங்கள் மாநிலங்களில் ‘‘பத்மாவதி’’ படத்துக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட் டுள்ளனர். ‘‘ராணி பத்மினி குறித்த வரலாற்று உண்மைகளை மறைத்து, திரித்து வேறு விதமாக கூறுவதை ஏற்க இயலாது’’ என்று அவர்கள் கூறியுள்ளனர்.

    ராஜஸ்தான் மாநிலத்திலும் பத்மாவதி திரைப்படத்தை திரையிட முதல்-மந்திரி வசுந்தரராஜே சிந்தியா தடை விதித்துள்ளார். மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ள மாற்றங்கள் படத்தில் சேர்க்கப்படும் வரை, ராஜஸ்தானில் படம் திரையிடப்படமாட்டாது என அவர் கூறியுள்ளார்.

    உத்தரபிரதேசம், அரியானா மாநில முதல் மந்திரிகளும் ‘பத்மாவதி’ படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ‘பத்மாவதி’ படம் திரையிடப்பட்டால் தங்கள் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று எச்சரித்துள்ளனர்.

    இந்த நிலையில் மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி, ‘பத்மாவதி’ படத்துக்கு வரவேற்பும் ஆதரவும் தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வின் திட்டமிட்ட செயலால் கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக மம்தா கூறியுள்ளார். ஆனால் வடக்கில் பெரும்பாலான மாநிலங்கள் ‘பத்மாவதி’ படத்துக்கு எதிராக திரும்பி உள்ளன.

    என்றாலும் நடிகை தீபிகா படுகோனே, டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதை கண்டித்துள்ளனர். ரூ.10 கோடி பரிசு அறிவித்த பா.ஜ.க. நிர்வாகியிடம் பா.ஜ.க. மேலிட தலைவர்கள் விளக்கம் கேட்டுள்ளனர்.

    தீபிகா படுகோனே கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. பெங்களூரில் உள்ள அவரது வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    என்றாலும் வெளியில் சென்று வர தீபிகாபடுகோனே தயங்குகிறார். ஐதராபாத்தில் வரும் 28-ந்தேதி பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மகள் இலங்கா ஆகியோர் பங்கேற்கும் சர்வதேச தொழில் மாநாட்டில் தீபிகா கலந்து கொள்ள இருந்தார். ஆனால் தற்போது அவர் அங்கு செல்வதை ரத்து செய்து விட்டார்.

    இதற்கிடையே நடிகர்-நடிகைகள் மற்றும் திரை உலகினர் தீபிகாவுக்கு ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் தகவலில், ‘‘தீபிகா தலையை காப்பாற்ற வேண்டும். அவர் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். அவருக்கான அந்த உரிமையை மறுக்க கூடாது’’ என்று கூறியுள்ளார்.

    நடிகை கஸ்தூரியும் தீபிகாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால் பிரபல இந்திய நடிகர்- நடிகைகள் இதுவரை வெளிப்படையாக தீபிகாவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ‘பத்மாவதி’ படம் தொடர்பான இந்த சர்ச்சைகள் திரையுலகம், அரசியல் உலகம் இரண்டிலும் எதிரொலித்தப்படி உள்ளது.

    Next Story
    ×