search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீகாரில் கழிவறை கட்ட தாலி-கம்மலை விற்ற பெண்
    X

    பீகாரில் கழிவறை கட்ட தாலி-கம்மலை விற்ற பெண்

    பீகாரில் கழிவறை ஊழல் பிரச்சனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் ஒரு பெண் அரசின் நிதி உதவி பற்றி தெரியாமல் தாலி, கம்மலை விற்று கழிவறை கட்டிய சம்பவம் நடந்துள்ளது.
    பாட்னா:

    பீகாரில் கிராமப் பகுதியில் அரசு சார்பில் கழிவறை கட்ட மானியத்துடன் கூடிய நிதி உதவி வழங்கப்படுகிறது. இதில் ரூ.15 கோடி ஊழல் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

    கழிவறை ஊழல் பிரச்சனை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் ஒரு பெண் அரசின் நிதி உதவி பற்றி தெரியாமல் தாலி, கம்மலை விற்று கழிவறை கட்டிய சம்பவம் நடந்துள்ளது.

    பாட்னா அருகில் உள்ள வருணா கிராமத்தில் வசிக்கும் தலித் பெண் ருங்கி தேவி. 48 வயதாகும் இவர் படிப்பறிவில்லாதவர். இவர் கணவர் பரசுராம் பஸ்வானிடம் வீட்டில் கழிவறை வசதி இல்லாததால் திறந்த வெளியில் செல்ல வேண்டி உள்ளது. எனவே கழிவறை கட்டி கொடுங்கள் என்று கேட்டார். அவர் சம்பாதிக்கும் பணம் போதுமானதாக இல்லாததால் கழிவறை கட்டாமல் நாட்களை கடத்தி வந்தார்.

    பணம் இல்லாமல் கணவர் தயங்கியதால் ருங்கி தேவி தாலியை விற்று கழிவறை கட்ட முடிவு செய்தார். கணவருக்கு தெரியாமல் தாலியை எடுத்துக்கொண்டு நகை வியாபாரியிடம் கொடுத்து அதை ரூ.9000-க்கு விற்றாள். அந்தப் பணம் போதுமானதாக இல்லாததால் கம்மலையும் ரூ.4,000-க்கு விற்றாள்.

    அந்த பணத்தைக் கொண்டு ஆட்களை வைத்து கழிவறை கட்டும் பணியில் ஈடுபட்டாள். வீடு திரும்பிய கணவர், தனது வீட்டில் கழிவறை கட்டும் பணி நடப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். மனைவி நகையை விற்று இந்தப் பணியில் ஈடுபட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தாலும் பின்னர் சமாதானம் அடைந்து மனைவிக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

    இதற்கிடையே தாலியை விற்று பெண் கழிவறை கட்டும் பணியில் ஈடுபட்டது அரசின் கவனத்துக்கு தெரியவந்தது. அதிகாரிகள் வந்து அவரிடம் விசாரித்து சென்றனர். எனவே அரசின் நிதி உதவி அவருக்கு கிடைக்கும். விற்ற தாலி, கம்மலை திரும்ப பெறலாம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்.
    Next Story
    ×