search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.3,250 கோடி செலவில் இஸ்ரேலிடம் இருந்து ஏவுகணைகள் வாங்கும் ஒப்பந்தம் ரத்து
    X

    ரூ.3,250 கோடி செலவில் இஸ்ரேலிடம் இருந்து ஏவுகணைகள் வாங்கும் ஒப்பந்தம் ரத்து

    ரூ.3,250 கோடி செலவில் இஸ்ரேலிடம் இருந்து ஏவுகணைகள் வாங்கும் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது. அதற்கு பதிலாக, உள்நாட்டிலேயே ஏவுகணைகளை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ரூ.3,250 கோடி செலவில் இஸ்ரேலிடம் இருந்து ஏவுகணைகள் வாங்கும் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது. அதற்கு பதிலாக, உள்நாட்டிலேயே ஏவுகணைகளை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்திய ராணுவத்துக்கு டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் வாங்க கடந்த 2014-ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை பெற இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ரபேல் நிறுவனமும், அமெரிக்காவை சேர்ந்த ரேதியான் லாக்கீட் மார்ட்டின் நிறுவனமும் போட்டியிட் டன. ரபேல் நிறுவனம் தயாரிக்கும் ‘ஸ்பைக்’ ஏவுகணைகள், உலகம் முழுவதும் 26 நாடுகளின் ராணுவங்களால் பயன்படுத்தப்படுவதால், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தை சமாளிக்க ‘ஸ்பைக்’ ஏவுகணைகளே உகந்தவை என்று இந்திய ராணுவம் கருதியது. இவை, இரவிலும், பகலிலும் பயன்படுத்தக்கூடிய ஏவுகணைகள் ஆகும்.

    எனவே, ரபேல் நிறுவனத்திடமே சுமார் 8 ஆயிரம் ‘ஸ்பைக்’ ஏவுகணைகளையும், 300 லாஞ்சர்களையும் வாங்க முடிவு செய்யப்பட்டது. இது, ரூ.3,250 கோடி மதிப்புடைய பேரம் ஆகும்.

    இந்நிலையில், திடீர் திருப்பமாக, அந்த பேரத்தை ராணுவ அமைச்சகம் நேற்று ரத்து செய்தது. அதற்கு பதிலாக, உள்நாட்டிலேயே ராணுவ தளவாடங்களை தயாரிக்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திடம் (டி.ஆர்.டி.ஓ.) டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை உருவாக்கி வழங்கும் பொறுப்பை ஒப்படைத்தது.

    இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகளுக்குள் இந்த ஏவுகணைகளை வடிவமைத்து தருமாறு கேட்டுக்கொண்டது.

    இந்த பேரம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், ‘மேக் இன் இந்தியா’ திட்டப்படி, ஏவுகணை தொழில்நுட்பங்களை இந்தியாவிடம் பகிர்ந்து கொள்ளுமாறு இந்தியா அறிவுறுத்தியதை இஸ்ரேல் நிறுவனம் ஏற்க மறுத்து விட்டதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    பல ஆண்டுகளாக, எந்த இந்திய பிரதமரும் இஸ்ரேலுக்கு செல்லாத நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஜூலை மாதம் அங்கு சென்றார். இதனால், இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ ரீதியிலான உறவு வளர்ந்து வந்தது.

    இந்த சூழ்நிலையில், ஏவுகணை பேரம் ரத்து செய்யப்பட்டதால், இருநாட்டு உறவு பாதிக்கப்படும் நிலை எழுந்துள்ளது. இதற்கிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, ஜனவரி 14-ந் தேதி இந்தியாவுக்கு வருகிறார். அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.

    Next Story
    ×