search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் தொடரும் அரசியல் வன்முறை: கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் குண்டு வீச்சு
    X

    கேரளாவில் தொடரும் அரசியல் வன்முறை: கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் குண்டு வீச்சு

    கேரளாவில் அரசியல் வன்முறை சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் நேற்றும் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் மீது ஒரு கும்பல் குண்டு வீச்சு மற்றும் நிர்வாகிகள் மீது தாக்குதல் போன்ற சம்பவங்களை நடத்தி உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி அமைந்தபிறகு அந்த கட்சி தொண்டர்களுக்கும் பாரதீயஜனதா, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளுக்கும் இடையே அரசியல் மோதல்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

    இந்த மோதல்கள் பல இடங்களில் கொலையில் முடிவடைந்ததால் இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவர அனைத்து கட்சி கூட்டம் முதல்-மந்திரி பினராய்விஜயன் தலைமையில் நடத்தப்பட்டது. ஆனாலும் இந்த மோதல்கள் முடிவுக்கு வரவில்லை.

    சமீபத்தில் திருவனந்தபுரம் மாநகராட்சி கூட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியின் மேயர் பிரசாந்தை பாரதீயஜனதா கவுன்சிலர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். தற்போது திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். முதல்-மந்திரி பினராய் விஜயன் அவரை ஆஸ்பத்திரியில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதுபற்றி அவர் கூறும்போது மத்தியில் ஆட்சி அதிகாரம் உள்ளது என்பதால் பாரதீயஜனதா கட்சியினர் இதுபோன்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். இதுபற்றி தீவிர விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட பாரதீய ஜனதா கவுன்சிலர்கள் மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இந்த நிலையில் நேற்றும் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் மீது குண்டு வீச்சு மற்றும் அலுவலகம் சூறை, நிர்வாகிகள் மீது தாக்குதல் போன்ற சம்பவங்கள் நடந்து உள்ளது. கண்ணூர் அழிக்கால் என்ற இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    நேற்று இரவு இந்த அலுவலகத்தில் கட்சியின் கிளை பொறுப்பாளர் ராஜேஷ் என்பவர் மட்டும் இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டை அந்த அலுவலகம் மீது வீசிவிட்டு தப்பிச் சென்றுவிட்டது. இந்த குண்டு வெடித்ததில் ராஜேசுக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    பாரதியஜனதா கட்சியினர்தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கம்யூனிஸ்டு கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

    திருவனந்தபுரம் தம்பானூர் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட கமிட்டி அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று 7-க்கும் மேற்பட்ட கார்களில் பாரதீயஜனதா தொண்டர்கள் கும்பலாக வந்தனர். அவர்கள் அந்த அலுவலகத்திற்குள் அத்து மீறி நுழைந்து சூறையாடினார்கள்.

    கம்யூனிஸ்டு தொண்டர்களும் தாக்கப்பட்டனர். பிறகு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது. அந்த கட்சி அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆனால் பாரதியஜனதா கட்சியினர் எண்ணிக்கையில் அதிகமாக இருந்ததால் போலீசாரால் அவர்களை தடுத்து நிறுத்த முடியவில்லை.

    திருவனந்தபுரம் நகர கம்யூனிஸ்டு கட்சி பொறுப் பாளராக இருப்பவர் சசிகுமார் (வயது 36). இவர் நேற்று காலை 8 மணி அளவில் காட்டாக்கடை பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது இன்னொரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் அவரை பின்தொடர்ந்து வந்தனர். அவர்கள் சசி குமாரை அரிவாளால் வெட்டினார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்க சசிகுமார் சாலையில் ஓடினார். மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் ஓட, ஓட விரட்டி அவரை வெட்டினர். அதற்குள் பொதுமக்கள் அங்கு கூடியதால் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். படுகாயம் அடைந்த சசிகுமாரை பொது மக்கள் காப்பாற்றி அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து உள்ளனர்.

    சசிகுமாரை மோட்டார் சைக்கிளில் வந்தவர் வெட்டும் காட்சிகள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது. அதன்மூலம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். முதல் கட்ட விசாரணையில் ஒரு அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதற்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    Next Story
    ×