search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத் சட்டசபை தேர்தல்: பா.ஜனதா வேட்பாளர்களுக்கு கடும் எதிர்ப்பு - போராட்டம்
    X

    குஜராத் சட்டசபை தேர்தல்: பா.ஜனதா வேட்பாளர்களுக்கு கடும் எதிர்ப்பு - போராட்டம்

    குஜராத் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளர்களுக்கு எதிராக சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் கிடைக்காதவர்கள் தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    அகமதாபாத்:

    குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக டிசம்பர் 9 மற்றும் 14-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது. ஆளும் பாரதிய ஜனதா ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள போராடி வருகிறது. அந்த கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் பாரதிய ஜனதா 2 கட்டமாக 106 இடங்களுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருந்தது. முதல் கட்டமாக 70 தொகுதிக்கும், 2-வது கட்டமாக 36 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். 3 மந்திரிகள், தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கு மீண்டும் டிக்கெட் கொடுக்கவில்லை. புதுமுகங்களுக்கு சீட் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு அந்த கட்சியிலேயே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் கிடைக்காதவர்கள் தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    பல்வேறு தொகுதிகளில் பாரதிய ஜனதா வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். டிக்கெட் கிடைக்காதவர்கள் தனது ஆதரவாளர்களுடன் பாரதிய ஜனதா தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதனால் குஜராத் மாநில பா.ஜனதாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    குஜராத் மாநில பா.ஜனதாவின் மூத்த தலைவர் ஐ.கே.ஜடேஜா சவுராஸ்டிரா மாவட்டம் வத்வான் தொகுதியில் போட்டியிட டிக்கெட் கேட்டு இருந்தார். ஆனால் அவருக்கு டிக்கெட் கொடுக்கவில்லை. படேல் சமூகத்தை சேர்ந்த தன்ஜி படேலுக்கு சீட் கொடுக்கப்பட்டது.

    பா.ஜ.க. மூத்த தலைவர் ஐ.கே.ஜடேஜா

    இதனால் ஜடேஜா தனது ஆதரவாளர்களுடன் குஜராத் மாநில பா.ஜனதா தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தார். பா.ஜனதா தலைமைக்கு எதிராக கோ‌ஷமிட்டார். பா.ஜனதா அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து போட்டியிட போவதாக அவர் அறிவித்து உள்ளார்.

    இதேபோல மேலும் பல தொகுதிகளில் வேட்பாளர்களை மாற்றக் கோரி பா.ஜனதாவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் வேட்பாளர் பட்டியல் விவகாரத்தில் பா.ஜனதா மேலிடத்துக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. அதிருப்தி தலைவர்களை சமாதனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    Next Story
    ×