search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய பிரதேசம்: போலீஸ் நிலையத்தில் மேடை அமைத்து ஆபாச நடனம் - அதிகாரி ‘சஸ்பெண்டு’
    X

    மத்திய பிரதேசம்: போலீஸ் நிலையத்தில் மேடை அமைத்து ஆபாச நடனம் - அதிகாரி ‘சஸ்பெண்டு’

    மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலைய வாசலில் மேடை அமைத்து இந்தி பட பாடல்களுக்கு ஆபாச நடனம் ஆடியதால் போலீஸ் அதிகாரி ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டார்.
    போபால்:

    மத்தியபிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் திப்னா கெதா என்ற கிராமத்தில் போலீஸ் நிலையம் உள்ளது. இங்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக யோகேந்திர பார்மர் பதவி வகிக்கிறார். இவர் இந்த நிலையத்தின் பொறுப்பாளராக இருக்கிறார்.

    இந்த நிலையில் போலீஸ் அதிகாரி யோகேந்திர பார்மரை திப்னா கெதாவில் இருந்து கஞ்ச் பசோதாவுக்கு 2 நாட்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது திப்னா கெதா மக்களுக்கு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியது.

    இதற்கிடையே யோகேந்திர பார்மர் மீது துறை ரீதியான விசாரணை முடிவடையாமல் இருந்ததால் அவரது பணியிட மாற்றம் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் திப்னா கெதா கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    அதை மிகவும் பிரமாண்டமாக கொண்டாட முடிவு செய்தனர். இதையடுத்து போலீஸ் நிலையத்தின் உள்ளேயும், வெளியேயும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் போலீஸ் நிலைய வாசலில் மிகப்பெரிய மேடை அமைத்து கடந்த 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை நடன நிகழ்ச்சி நடத்தினர்.

    குழுவினருடன் சேர்ந்து கிராம மக்களும், போலீசாரும், போலீஸ் அதிகாரியும் இந்தி பட பாடல்களுக்கு ஏற்ப குத்தாட்டம் நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

    இதுகுறித்து விதிஷா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வினீத்கபூரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.

    முடிவில் போலீஸ் அதிகாரி யோகேந்திர பார்மர் ‘சஸ்பெண்டு’ (தற்காலிக பணிநீக்கம்) செய்யப்பட்டார். மேலும் இங்கு பணிபுரிந்த 3 போலீஸ் ஏட்டு மற்றும் போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

    இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வினித்கபூர் கூறும்போது, “இதுபோன்ற ஒழுக்க கேடான செயல்களை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது போலீசாருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறது. எனவேதான் இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.
    Next Story
    ×