search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா - இளவரசியிடம் விசாரணை எப்போது?: பரபரப்பு தகவல்கள்
    X

    சசிகலா - இளவரசியிடம் விசாரணை எப்போது?: பரபரப்பு தகவல்கள்

    சசிகலா உறவினர் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையையடுத்து சிறையில் உள்ள சசிகலா, இளவரசியிடம் விசாரணை நடத்த மேலும் காலதாமதம் ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது.
    பெங்களூரு:

    சசிகலா, திவாகரன், இளவரசி, தினகரன், இளவரசியின் மகன் விவேக், மகள்கள் கிருஷ்ணபிரியா, சகிலா மற்றும் அவர்களது குடும்பத்தினர் தொடர்புடைய வீடு மற்றும் அலுவலகங்களில் 5 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.



    கர்நாடக மாநில அ.தி.மு.க. அம்மா அணி செயலாளர் புகழேந்தி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. கடந்த 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை 5 நாட்கள் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம் உள்பட 3 மாநிலங்களில் மொத்தம் 187 இடங்களில் 1800 அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையின் அடிப்படையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் ஜெயா டி.வி. தலைமை செயல் அதிகாரியும், ஜாஸ் சினிமாஸ் நிர்வாக இயக்குனருமான விவேக், அவரது சகோதரிகள் கிருஷ்ண பிரியா, சகிலா, சசிகலாவின் அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேஷ், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், ஜெயா டி.வி. மானேஜர் நடராஜன், டாக்டர் சிவக்குமார், இளவரசியின் மருமகன்கள் ராஜராஜன், கார்த்திகேயன், ஜாஸ் சினிமாஸ் நிர்வாகிகள் 3 பேர், கர்நாடக மாநில அ.தி.மு.க. அம்மா அணி செயலாளர் புகழேந்தி, கொடநாடு எஸ்டேட் மானேஜர் உள்ளிட்ட பலரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



    தற்போது விவேக், கிருஷ்ணபிரியா, சகிலா ஆகியோரிடம் விசாரணையை தீவிரப்படுத்த தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது கிடைத்த தகவலின் அடிப்படையில் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் வீட்டில் உள்ள பூங்குன்றன் அறை மற்றும் சசிகலாவின் இரண்டு அறைகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது ஒரு லேப்-டாப், டேப்லெட், 6 பென்டிரைவ்கள், கனிணி, ஜெயலலிதாவுக்கு வந்த கடிதங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரியவந்துள்ளது.

    அடுத்தகட்டமாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா மற்றும் இளவரசியிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த விசாரணை நடத்த மேலும் காலதாமதம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

    சசிகலா, இளவரசியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றால் சென்னையில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் பரப்பன அக்ரஹார தலைமை சூப்பிரண்டிடம் அனுமதி கடிதம் கொடுக்க வேண்டும். அந்த கடிதத்தை தலைமை சூப்பிரண்டு சிறைத்துறை டி.ஜி.பி.க்கு அனுப்பி வைப்பார். சிறைத்துறை டி.ஜி.பி. அந்த கடிதத்தை கர்நாடக மாநில உள்துறைக்கு அனுப்பி வைப்பார்.

    கர்நாடக உள்துறை அதிகாரிகள் இது குறித்து முதல்-அமைச்சரிடம் ஆலோசித்து விட்டு தான் சசிகலா, இளவரசியிடம் விசாரணை நடத்த அனுமதி கொடுப்பார்கள். இதற்கு ஒரு வாரம் முதல் 15 நாட்கள் வரை ஆகலாம். ஏற்கனவே கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அவரிடம் விசாரணை நடத்த இதே முறையில் தான் வருமான வரித்துறை அதிகாரிகள் சிறை சூப்பிரண்டிடம் கடிதம் கொடுத்து அனுமதி பெற்று அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.

    கடிதம் கொடுத்த 30 முதல் 45 நாட்களுக்கு பிறகே ஜனார்த்தனரெட்டியிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல்தான் சசிகலா, இளவரசி விவகாரத்திலும் நடைமுறைகள் உள்ளன. எனவே உடனடியாக சசிகலா, இளவரசியிடம் விசாரணை நடத்த முடியாது. அவர்களிடம் விசாரணை நடத்த காலதாமதம் ஏற்படும்.

    இது குறித்து தினகரனின் ஆதரவாளரும், வக்கீலுமான எம்.ஜே. பாலசுப்ரமணி கூறியதாவது:-

    வருமான வரித்துறை அதிகாரிகள் தாங்கள் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து இதுவரை தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. சசிகலா, இளவரசியிடம் அவர்கள் விசாரணை நடத்தப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வருமான வரித்துறை அதிகாரிகள் நினைத்த உடனேயே சிறையில் உள்ள சசிகலா, இளவரசியிடம் விசாரணை நடத்த முடியாது. கர்நாடக உள்துறை முதல் சிறை நிர்வாகம் வரையும் வழக்கு விசாரணை நடந்த சுப்ரீம் கோர்ட்டிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் அனுமதி பெற வேண்டும். அதன் பிறகுதான் சசிகலா, இளவரசியிடம் விசாரணை நடத்த முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×