search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    44 சிப்பந்திகளுடன் காணாமல் போன அர்ஜெண்டினா நீர் மூழ்கிக் கப்பலில் இருந்து சிக்னல் வந்தது: தேடுதல் வேட்டை தீவிரம்
    X

    44 சிப்பந்திகளுடன் காணாமல் போன அர்ஜெண்டினா நீர் மூழ்கிக் கப்பலில் இருந்து சிக்னல் வந்தது: தேடுதல் வேட்டை தீவிரம்

    அர்ஜெண்டினா நீர் மூழ்கிக் கப்பலில் இருந்து செயற்கை கோள் சிக்னல் வந்துள்ளதை அடுத்து கப்பலில் உள்ள சிப்பந்திகள் 44 பேரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு உண்டு என்ற நம்பிக்கை சற்றே ஏற்பட்டுள்ளது.
    பியூனஸ் அயர்ஸ்:

    அர்ஜெண்டினா நாட்டுக்கு சொந்தமானது, நீர் மூழ்கிக்கப்பல் ஏ.ஆர்.ஏ. சான் ஜூவான். இந்தக் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் தென் அமெரிக்காவின் தெற்கு முனைக்கு அருகே ஊஸ்ஹூவாயாவில் வழக்கமான பணியில் ஈடுபட்டது. அதைத் தொடர்ந்து பியூனஸ் அயர்சின் தெற்கில் அமைந்துள்ள மார் டெல் பிலாடா தளத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தது. அந்த கப்பலில் 44 சிப்பந்திகள் இருந்தனர்.

    இந்த நிலையில், அந்தக் கப்பல் திடீரென காணாமல் போய்விட்டது. அந்தக் கப்பலில் இருந்து கடைசியாக கடந்த புதன்கிழமை காலையில் சிக்னல் கிடைத்தது. அதன்பின்னர் சிக்னல் இல்லை. இதையடுத்து அந்தக் கப்பல் காணாமல் போய்விட்டதாக அஞ்சப்படுகிறது. டீசல் மின்சார சக்தியால் இயங்குகிற அந்தக் கப்பல், கடலில் இருந்து 430 கி.மீ. தொலைவில் வந்தபோதுதான் காணாமல் போய் உள்ளது.

    இந்த நிலையில் அர்ஜெண்டினா கடற்படைக்கு தோல்வி அடைந்த 7 செயற்கை கோள் அழைப்புகள் சனிக்கிழமை வந்துள்ளன. இதனால் செயற்கை கோள் சிக்னல் கிடைத்தது உறுதியானது. இதனால் கப்பலில் உள்ள சிப்பந்திகள் 44 பேரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு உண்டு என்ற நம்பிக்கை சற்றே ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து அந்த கப்பலை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. குறிப்பாக அந்த நீர்மூழ்கிக்கப்பல் கடைசியாக இருந்ததாக அறியப்படுகிற தென்கிழக்கு வால்டெஸ் தீபகற்பத்தில் அர்ஜெண்டினாவின் போர்க்கப்பல் ஒன்றும், 2 வழித்துணை கப்பல்களும் தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    கடுமையான காற்று வீசுவதாலும், உயர்ந்த அலைகள் எழுவதாலும், இந்தப் பணி சிக்கலாகி உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

    மின் வெட்டினால் அந்த கப்பலின் தகவல் தொடர்பில் சிரமம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. தகவல் தொடர்பு இழந்துவிட்டால், நீர் மூழ்கிக்கப்பல் கடல் நீரின் மேற்பகுதிக்கு வந்து விட வேண்டும் என்பது அர்ஜெண்டினா கடற்படையின் மரபு வழியான நெறிமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

    மாயமான கப்பலை தேடும் பணிக்கு உதவ இங்கிலாந்தும், பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளும் முன்வந்துள்ளன. 
    Next Story
    ×