search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலையில் ரூ.1,000 செலுத்தினால் சிறப்பு தரிசனம் செய்யலாம்
    X

    சபரிமலையில் ரூ.1,000 செலுத்தினால் சிறப்பு தரிசனம் செய்யலாம்

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் ரூ.1,000 மற்றும் அதற்கு மேல் நிதி அளித்து சிறப்பு தரிசனம் செய்யலாம் என்றும், அன்னதானத்துக்கு நிதி ஆதாரத்தை அதிகரிக்க இந்த புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது
    சபரிமலை:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் ரூ.1,000 மற்றும் அதற்கு மேல் நிதி அளித்து சிறப்பு தரிசனம் செய்யலாம் என்றும், அன்னதானத்துக்கு நிதி ஆதாரத்தை அதிகரிக்க இந்த புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது என்றும் திருவிதாங்கூர் தேவஸ்தான உறுப்பினர் தெரிவித்தார்.

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்தநிலையில் சபரிமலையில் திருவிதாங்கூர் தேவஸ்தான உறுப்பினர் ராகவன், பக்தர்களுக்கான வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் அன்னதான திட்டம் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்திற்கான நிதி ஆதாரத்தை அதிகரிக்க சிறப்பு தரிசனம் செய்வதற்கான புதிய திட்டத்தை திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிமுகம் செய்துள்ளது.

    அன்னதான திட்டத்துக்கு ரூ.1,000 மற்றும் அதற்கு மேல் நிதி அளிப்பவர்களுக்கு சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். மற்ற பக்தர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் செயல்படுத்தப்படும்.

    பணம் செலுத்தி பெறப்படும் ரசீதை காண்பித்து சிறப்பு வரிசை வழியாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். இந்த தரிசன திட்டமானது ஒரு துணை போலீஸ் கமிஷனரின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயல்படுத்தப்படும்.

    கடந்த 15-ந்தேதி கோவிலின் நடை திறக்கப்பட்டது. 17-ந்தேதி வரை சபரிமலையில் காணிக்கை, அப்பம், அரவணை மற்றும் பூஜைகள் மூலமாக ரூ.4 கோடியே 34 லட்சம் கிடைத்துள்ளது. தரிசன நேரத்தை அதிகரித்து இருப்பதன் மூலம் பக்தர்களின் கூட்ட நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    சபரிமலையில் இணையதளம் மூலம் வாடகைக்கு அறைகள் முன்பதிவு செய்யவும் வசதி செய்யப்பட்டு உள்ளது. 15 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்ய வேண்டும். சன்னிதானத்திலும் தினமும் மாலை 4 மணி முதல் நேரில் முன்பதிவு செய்யவும் வசதி செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×