search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானில் அச்சிட்டு வந்த அச்சு அசலான ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டு ரூ.900-க்கு விற்பனை
    X

    பாகிஸ்தானில் அச்சிட்டு வந்த அச்சு அசலான ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டு ரூ.900-க்கு விற்பனை

    பாகிஸ்தானில் அச்சிட்டு வந்த ரூ.2 ஆயிரம் அச்சு அசலான கள்ள நோட்டு ரூ.900-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கள்ள நோட்டுகளை டெல்லியில் சப்ளை செய்ய வந்த ஒருவர் சிக்கினார்.
    புதுடெல்லி:

    பாகிஸ்தானில் அச்சிட்டு வந்த ரூ.2 ஆயிரம் அச்சு அசலான கள்ள நோட்டு ரூ.900-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கள்ள நோட்டுகளை டெல்லியில் சப்ளை செய்ய வந்த ஒருவர் சிக்கினார். அவரிடம் போலீஸ் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியது.

    கிழக்கு டெல்லியில் ஆனந்த் விகார் பகுதியில் கள்ள நோட்டுகளை வாங்குகிற ஒருவருக்கு 16-ந்தேதி ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகளை சப்ளை செய்வதற்கு ஒருவர் வரப்போவதாக டெல்லி சிறப்பு படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர்கள் அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கே சந்தேகத்துக்கு இடம் அளிக்கிற வகையில் வந்த ஒருவரை மடக்கிப்பிடித்து சோதனை போட்டனர். அப்போது அவரிடம் ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகள் கட்டு, கட்டாக இருப்பதை கண்டனர். அவரை உடனே கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகள் 330-ஐ கைப்பற்றினர். அவற்றின் மதிப்பு ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் ஆகும்.

    இதுபற்றி டெல்லி சிறப்பு போலீஸ் துணை கமிஷனர் பி.எஸ்.குஷ்வா கூறுகையில், “இந்த கள்ள நோட்டுகள் அனைத்தும் நல்ல தரமான காகிதத்தில், பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சு அசலாக ஒரிஜினல் நோட்டுகள் போலவே இருக்கின்றன. ஆனால் மொத்த நோட்டுகளையும் ஸ்கேன் செய்தால் மட்டுமே அதில் உள்ள குறை தெரிகிறது. அதாவது, கைப்பற்றப்பட்ட நோட்டுகளில் 250 நோட்டுகளில் ஒரே சீரியல் எண் உள்ளது. 80 நோட்டுகள் 4 பொதுவான சீரியல் எண்களை கொண்டுள்ளன” என்றார்.

    கைது செய்யப்பட்டுள்ள நபரின் பெயர், காஷித் (வயது 54). இவர் மேற்கு வங்காள மாநிலம், மால்டா பகுதியை சேர்ந்தவர்.

    போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையின்போது அவர் கூறியதாவது:-

    நான் 15 வருடங்களாக கள்ள நோட்டு விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறேன். டெல்லி, உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் இந்த கள்ள நோட்டுகளை விற்பனை செய்து வந்துள்ளேன். நான் கள்ள நோட்டுகளை பாகிஸ்தானை சேர்ந்தவரிடம் இருந்து வாங்கி வந்தேன். அவர் எல்லையில் இருந்து வேலி வழியாக கள்ள நோட்டுகளை வீசுவார். ரூ.100 நோட்டுகளின் விலை ரூ.30. நான் அவற்றை ரூ.45-க்கு விற்பனை செய்தேன்.

    ரூ.2 ஆயிரம் நோட்டுகளை ரூ.900-க்கு விற்பனை செய்தேன். டெல்லிக்கு நான் ரூ.2 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகளை கொண்டு வந்திருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகள் அச்சு அசலாக இருப்பது போலீசுக்கு கவலையை அளித்துள்ளது. ரூ.2 ஆயிரம் நோட்டுக்கு பயன்படுத்தக்கூடிய அனைத்து மை, பாதுகாப்பு அம்சங்களை பாகிஸ்தான் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ. ஆதரவு பெற்ற பெஷாவர், கராச்சி நகர அச்சகங்கள்தான் காப்பி அடித்து கள்ளநோட்டுகளை அச்சிட்டு வருகின்றனவாம். ஆனால் ரூ.500 கள்ளநோட்டுகளைத்தான் அச்சடிக்க முடியாமல் திணறுகின்றனராம்.

    “தொலைபேசி உரையாடல்களை உளவுத்துறையினர் இடைமறித்து கேட்டதில் கடந்த மே மாதத்தில் இருந்து ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகள் பெரிய அளவில் இந்தியாவுக்குள் வந்துள்ளன. கடந்த மாதம்கூட இப்படிப்பட்ட கள்ள நோட்டு பார்சல்கள் பிடிபட்டுள்ளன” என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. 
    Next Story
    ×