search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜ.க.வை வீழ்த்த இடதுசாரிகள் காங்கிரஸ் தலைமையில் செயல்பட வேண்டும் - மன்மோகன் சிங்
    X

    பா.ஜ.க.வை வீழ்த்த இடதுசாரிகள் காங்கிரஸ் தலைமையில் செயல்பட வேண்டும் - மன்மோகன் சிங்

    மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை வீழ்த்த தேசிய அளவில் இடதுசாரிகள் காங்கிரஸ் தலைமையில் செயல்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

    திருவனந்தபுரம்:

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சி நகரில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் மத்திய அரசு கொண்டுவந்த புதிய திட்டங்களை சாடி பேசினார். குறிப்பாக பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கடுமையாக சாடினார். மேலும் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை எதிர்க்க வேண்டும் என்றால் இடதுசாரிகள் காங்கிரசுடன் இணைந்து செயல்பட வேண்டும், என கூறினார்.

    அந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    தேசிய அளவில் பா.ஜ.க.வை ஒன்றாக எதிர்கொள்ள போகிறோமா இல்லையெனில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரசையும், பா.ஜ.க.வையும் ஒரே இடத்தில் வைத்து பார்க்க போகிறதா?. மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் தவறான கொள்கைகளுக்கு எதிராக வெற்றிபெற அனைவரும் இணைந்து ஒன்றாக செயல்பட வேண்டும். கேரளாவில் தற்போதைய ஆட்சியில் பெண்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லை. பொருளாதார முன்னேற்றமும் மந்தமாக இருக்கிறது.

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம் நாட்டுமக்கள் மீது மோடி அரசு பெரும் சுமையை திணித்துள்ளது. பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி.யின் பலன்கள் என்ன?. அவை நாட்டின் முன்னேற்றத்தை பின்னுக்கு தள்ளிவிட்டன.

    2015-16 ம் காலகட்டத்தில் 7.2 சதவிகிதமாக இருந்த ஜி.டி.பி. வளர்ச்சி விகிதம், 2017-18 ம் காலகட்டத்தின் முதல் காலாண்டில் 5.7 சதவிகிதமாக குறைந்துவிட்டது. ஜி.எஸ்.டி.க்கு காங்கிரசின் ஆதரவு உள்ளது. ஆனால் காங்கிரஸ் அதை நல்ல திட்டங்களுடனும், முன்னெச்சரிக்கையுடனும் அறிமுகம் செய்திருக்கும். ஒரு நாடு, ஒரு வரி என்பதே எங்கள் கொள்கை.

    பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் கருப்புப்பண ஒழிப்பு, தீவிரவாத ஒழிப்பு மற்றும் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் வரும் கள்ளநோட்டு ஒழிப்பு ஆகியவை சாத்தியமாகும் என பா.ஜ.க. கூறியது. ஆனால் அதன்மூலம் மக்களுக்கு புதிய சுமையையே மத்திய அரசு கொடுத்துள்ளது. ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகளில் வரிசையில் நிற்கும் போது நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    பணமதிப்பு நீக்கம் வரலாற்றில் ஒரு பெரிய தவறாகும். ஆட்சிக்கு வருவதற்காக பல வாக்குறுதிகளை பா.ஜ.க. கொடுத்தது, ஆனால் அவற்றை இதுவரை சரியாக நிறைவேற்றவில்லை. 

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×