search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகாவில் தனியார் டாக்டர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்
    X

    கர்நாடகாவில் தனியார் டாக்டர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

    கர்நாடக தனியார் மருத்துவமனைகள் நிறுவுதல் சட்டத் திருத்தத்தை எதிர்த்து கடந்த 12 நாட்களாக நடைபெற்றுவந்த தனியார் டாக்டர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
    பெங்களூரு:

    கர்நாடக அரசின் சுகாதாரத்துறை சார்பில் கர்நாடக தனியார் மருத்துவமனைகள் நிறுவுதல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதில் மருத்துவ சிகிச்சைகளுக்கு கட்டணம் நிர்ணயித்தல், சிகிச்சை வாரியாக கட்டணங்கள் அடங்கிய பட்டியலை அனைவருக்கும் தெரியும் வகையில் சுவரில் ஒட்ட வேண்டும், சிகிச்சை பெறும் நோயாளி இறந்துவிட்டால் சிகிச்சை செலவுகளை செலுத்திவிட்டு பிணத்தை எடுத்து செல்லுமாறு வற்புறுத்த கூடாது என்பன உள்பட பல்வேறு புதிய அம்சங்கள் இந்த சட்ட திருத்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

    இந்த திருத்த மசோதா கடந்த முறை நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பா.ஜனதா உள்பட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதே வடிவில் இந்த மசோதாவை நிறைவேற்றக் கூடாது என்றும் அந்த கட்சிகள் வலியுறுத்தின. இதையடுத்து அந்த மசோதா சட்டசபையின் கூட்டு குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த கூட்டு குழுவும் அந்த மசோதாவை ஆய்வு நடத்தி முடித்துள்ளது.

    இந்த நிலையில் சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரில் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று தகவல்கள் வெளியாகின.

    இதற்கு தனியார் மருத்துவமனைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. புதிய மசோதாவில் இடம் பெறும் கடுமையான கட்டுப்பாடுகளை உள்ளடக்கிய அம்சங்களை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கர்நாடகத்தில் தனியார் மருத்துவமனைகள் கடந்த மூன்றாம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.

    இதனால் சுமார் 45 ஆயிரம் தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆய்வகங்கள் மூடப்பட்டு கிடந்தன. எனினும், அந்த மருத்துவமனைகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளுக்கு டாக்டர்கள் எந்த தடங்கலும் இன்றி சிகிச்சை அளித்தனர். ஆனால், புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டது. இதனால், தனியார் மருத்துவமனைகளை நம்பிவந்த பல நோயாளிகள் உரிய சிகிச்சை பெற முயாமல் தவித்து வந்தனர்.

    இந்நிலையில், மாநிலம் முழுவதும் கடந்த 12 நாட்களாக நடைபெற்றுவந்த தனியார் டாக்டர்கள் மற்றும் உதவி மருத்துவர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாகவும், தனியார் மருத்துவமனைகளில் உள்ள புறநோயாளிகள் மற்றும் பிற வசதிகள் உடனடியாக செயல்பட தொடங்கும் எனவும் இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் கர்நாடக தலைவர் எம்.என். ரவிந்திரா இன்று மாலை அறிவித்துள்ளார்.

    முதல் மந்திரி சித்தராமைய்யாவுடன் சமீபத்தில் நடத்திய பேச்சுவார்த்தையில் சர்ச்சைக்கிரிய சில அம்சங்களை நீக்குவதாக அவர் உறுதி அளித்ததன் பேரில் வேலை நிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×