search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடியின் செல்வாக்கு தொடர்ந்து அதிகரிப்பு: கருத்துக்கணிப்பில் தகவல்
    X

    பிரதமர் மோடியின் செல்வாக்கு தொடர்ந்து அதிகரிப்பு: கருத்துக்கணிப்பில் தகவல்

    பிரதமர் மோடியின் செல்வாக்கு தொடர்ந்து அதிகரிப்பதாக அமெரிக்க நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடியின் செல்வாக்கு தொடர்ந்து அதிகரிப்பதாக அமெரிக்க நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. நாடு முழுவதும் வீசிய மோடி அலையே இந்த வெற்றிக்கு பிரதான காரணமாக கூறப்பட்டது. பின்னர் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் மோடியின் இந்த செல்வாக்கு தொடர்ந்து அதிகரிப்பதாக பல்வேறு கருத்துக்கணிப்புகளிலும் தெரியவந்தது.

    ஆனால் கடந்த நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மத்திய அரசு மற்றும் பிரதமருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக இந்த நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததாக கூறி எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, பா.ஜனதாவை சேர்ந்த சில தலைவர்களும் பிரதமரை குறை கூறினர்.

    இவ்வாறு பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மத்திய அரசுக்கு எதிராக எதிர்மறை கருத்துகள் வெளியானபோதும் பிரதமர் மோடியின் செல்வாக்கு குறையவில்லை என தெரியவந்துள்ளது. அவரது செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்து வருவதாக, அமெரிக்காவை சேர்ந்த ‘பியூ’ என்ற நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் கண்டறியப்பட்டு உள்ளது.

    இந்த நிறுவனம் கடந்த பிப்ரவரி 21-ந்தேதி மார்ச் 10-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் மக்களிடம் கருத்துக்கணிப்பு மேற்கொண்டது. சுமார் 2,464 பேரிடம் எடுக்கப்பட்ட இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளை தற்போது அந்த நிறுவனம் வெளியிட்டு உள்ளது.

    அதாவது இந்திய அரசியல் பிரபலங்களில் அதிக செல்வாக்கு மிக்கவராக பிரதமர் மோடி விளங்குவதாக கண்டறியப்பட்டு உள்ளது. 10-ல் 9 பேர் பிரதமருக்கு ஆதரவளித்து உள்ளனர். மக்களின் ஆதரவு தொடர்பாக பிரதமர் 88 சதவீதம், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி 58 சதவீதம், சோனியா காந்தி 57 சதவீத வாக்குகள் பெற்றுள்ளனர்.

    நாட்டின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் மோடியின் செல்வாக்கு அதிகரித்து உள்ள நிலையில், கிழக்கில் சற்று குறைந்து இருக்கிறது. வடபகுதியில் எந்த மாற்றமும் இன்றி தொடர்வதாக பியூ நிறுவனம் கூறியுள்ளது. வேலையில்லா திண்டாட்டம், வறுமை, பயங்கரவாதம், ஊழல் போன்ற பிரச்சினைகளை பிரதமர் கையாளும் முறைக்கு 70 சதவீதத்தினர் திருப்தி வெளியிட்டு உள்ளனர்.

    இதைப்போல நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதாக 83 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து உள்ளனர். இது கடந்த 2014-ம் ஆண்டை (64 சதவீதம்) அதிகம் ஆகும்.

    இந்த கருத்துக்கணிப்பு, ஜி.எஸ்.டி. போன்ற நடவடிக்கைகளால் தற்போது எழுந்துள்ள மந்தநிலைக்கு முன்னர் எடுக்கப்பட்டது என்று கூறியுள்ள ‘பியூ’ நிறுவன இயக்குனர் புரூஸ் ஸ்டோக்ஸ், கடந்த சில மாதங்களில் பொதுமக்களின் மனநிலை எவ்வாறு மாறியிருக்கிறது? என்பதை இந்த கருத்துக்கணிப்பு பிரதிபலிக்காது என்றும் இ-மெயில் மூலம் குறிப்பிட்டு உள்ளார்.

    இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா மகிழ்ச்சி வெளியிட்டு உள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘பியூ நிறுவன ஆய்வு முடிவுகளில் வெளியாகி இருக்கும் தகல்கள் மிகவும் முக்கியமானது. மோடி அரசு பதவிக்கு வந்த பிறகு, அரசு மீதான மக்களின் நம்பிக்கை, ஜனநாயகம் அனைத்தும் நாடு சரியான பாதையில் செல்வதையே இது காட்டுகிறது’ என்று பாராட்டி உள்ளார்.

    நாடு முழுவதும் பிரதமரின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்து வருவதாக கூறியுள்ள அமித்ஷா, பல்வேறு பிரச்சினைகளை அவர் கையாளும் விதம் மக்களிடம் இருந்து பாராட்டு பெறுகிறது என்றும் குறிப்பிட்டு உள்ளார். 
    Next Story
    ×