search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி. வரி குறைப்பை கண்காணிக்க புதிய அமைப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    X

    ஜி.எஸ்.டி. வரி குறைப்பை கண்காணிக்க புதிய அமைப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    ஜி.எஸ்.டி. வரிக் குறைப்புக்கு பிறகு விலை குறைக்கப்பட்ட பொருட்களின் விற்பனையை கண்காணிக்க புதிய அமைப்பை நிறுவ மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
    புதுடெல்லி

    ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை 1-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. 5, 12, 18, 28 என நான்கு விகிதங்களில் வரி வசூலிக்கப்படுகிறது. இதனால், சிறு தொழில் முனைவோர், உற்பத்தியாளர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில், கவுகாத்தியில் சமீபத்தில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் 213 பொருட்களின் வரி விகிதங்களை குறைக்க முடிவு எடுக்கப்பட்டது. அதிகபட்ச வரியான 28 சதவீதம் விதிக்கப்பட்டிருந்த பொருட்களில், பெரும்பாலான பொருட்களின் வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்த வரி குறைப்பு நடவடிக்கை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

    இதன் காரணமாக வயர், பர்னிச்சர், மெத்தை, சூட்கேஸ், சலவைத்தூள், ஷாம்பு, மின்விசிறிகள், விளக்கு, ரப்பர் டியூப், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, நீரிழிவு நோயாளிகளின் உணவு, மருத்துவ ஆக்சிஜன், மூக்கு கண்ணாடி, தொப்பி, உருளைக்கிழங்கு பவுடர் உள்ளிட்ட 213 பொருட்களின் விலை குறைந்துள்ளது.

    இந்நிலையில், வரி குறைப்புக்கு பிறகு விலை குறைக்கப்பட்ட பொருட்களின் விற்பனையை கண்காணிக்க மத்திய அரசு சார்பில் ஜிஎஸ்டி-யின்கீழ் ஒரு அமைப்பு நிறுவப்பட உள்ளது.  என்.ஏ.ஏ. என்ற இந்த அமைப்பை நிறுவ மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.  விலைக்குறைப்பு பலனை நுகர்வோர் முழுமையாக பெறுவதற்கு இந்த புதிய அமைப்பு உதவும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் நீதித்துறை சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு 3320 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பருப்பு வகைகள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு லாபம் ஈட்டித்தரும் நோக்கில் இந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×