search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணா நதியில் படகு விபத்து: ஓட்டுநர் உள்பட 7 பேர் கைது
    X

    கிருஷ்ணா நதியில் படகு விபத்து: ஓட்டுநர் உள்பட 7 பேர் கைது

    ஆந்திரா மாநிலத்தின் கிருஷ்ணா நதியில் ஏற்பட்ட படகு விபத்து தொடர்பாக ஓட்டுநர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அதிகாரிகள் உள்பட 7 பேரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
    அமராவதி:

    ஆந்திரா மாநிலத்தின் கிருஷ்ணா நதியில் ஏற்பட்ட படகு விபத்து தொடர்பாக ஓட்டுநர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அதிகாரிகள் உள்பட 7 பேரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    ஆந்திரா மாநிலத்தின் விஜயவாடா அருகே உள்ள பெர்ரி கிராமப்பகுதி வழியாக கிருஷ்ணா நதி ஓடுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா சென்ற சிலர் நதியில் உல்லாச படகு சவாரியில் ஈடுபட்டனர். இதற்காக தனியார் படகு ஒன்றை வாடகைக்கு அமர்த்தி சுமார் 38 பேர் அதில் பயணம் மேற்கொண்டனர்.

    கோதாவரியும், கிருஷ்ணா நதியும் சந்திக்கும் இடமான பவித்ரா சங்கமம் அருகே படகு சென்றபோது திடீரென நிலைதடுமாறி ஆற்றில் கவிழ்ந்தது. அதில் இருந்தவர்கள் நீரில் மூழ்கி தத்தளித்தனர். இதைப்பார்த்த மீனவர்கள் சிலர், உடனே ஆற்றில் குதித்து 15 பேரை லேசான காயங்களுடன் மீட்டனர். மீதமுள்ளவர்களை தேடும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.

    அதற்குள் பலர் உயிரிழந்து விட்டனர். இதுவரை 22 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு மாநில அரசு தலா ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை அறிவித்தது. பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.

    இந்நிலையில், படகு விபத்துக்கு காரணமான ஓட்டுநர் மற்றும் அவரது மனைவி உள்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், படகில் 25 பேருக்கு மட்டுமே அனுமதி அளித்திருந்த நிலையில் 38 பேரை ஏற்றியுள்ளனர். இதையடுத்து படகு ஓட்டுநர் கெடலா ஸ்ரீனு, அவரது மனைவி கெடலா லட்சுமி, கொண்டல ராவ், சேஷகிரி ராவ், நீலம் சேஷகிரி உள்பட 7 பேர் கைது செய்துள்ளோம். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது என்றனர்.

    மேலும், இதுகுறித்து சுற்றுலா துறை மந்திரி பூமா அகிலபிரியா, உதவி பொது மேலாளர் ராமகிருஷ்ணா, துணை மேலாளர் கங்கா ராஜு, உதவி மேலாளர் கோலி ஸ்ரீதர் உள்பட 7 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
    Next Story
    ×