search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி. வரி தோல்விக்கு பொறுப்பேற்று அருண்ஜெட்லி பதவி விலக வேண்டும்: யஷ்வந்த் சின்கா போர்க்கொடி
    X

    ஜி.எஸ்.டி. வரி தோல்விக்கு பொறுப்பேற்று அருண்ஜெட்லி பதவி விலக வேண்டும்: யஷ்வந்த் சின்கா போர்க்கொடி

    ஜி.எஸ்.டி. வரி தோல்விக்கு பொறுப்பேற்று மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. வரி போன்றவற்றால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து விட்டதாக பாரதிய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான யஷ்வந்த் சின்கா ஏற்கனவே புகார் கூறி இருந்தார்.

    இந்த நிலையில் ஜி.எஸ்.டி. வரி தோல்விக்கு பொறுப்பேற்று மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி ராஜினாமா செய்ய வேண்டும் என்று யஷ்வந்த்சின்கா கூறியுள்ளார். இது சம்பந்தமாக அவர் அளித்த பேட்டி விவரம்:-

    கேள்வி:- ஜி.எஸ்.டி. வரியில் பெரிய அளவிலான மாற்றங்கள் செய்யப்பட்டு வரியை குறைத்துள்ளனர். மேலும் 28 சதவீத உச்சவரம்பு வரியை குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இதை நீங்கள் ஏற்று கொள்கிறீர்களா?

    பதில்:- முதலில் ஜி.எஸ்.டி. வரி விகித வரம்பு முறைகளை பார்க்க வேண்டும். இந்த வரி வரம்புகள் ஏற்கனவே இருந்த நடைமுறையை சீராக்கி கொண்டு வரப்பட்டுள்ளனவா? என்று பார்த்தால் அப்படி அதை செய்யவில்லை. 2002-ல் நான் மத்திய மந்திரியாக இருந்த போது மதிப்பு கூட்டு வரியை (வாட்) அறிமுகப்படுத்தினேன்.

    மாநிலங்களுக்குள் ஒரே வரிவிகித முறை அதில் கொண்டு வரப்பட்டது. ஜி.எஸ்.டி.யில் சமநிலை வரிமுறையை கொண்டு வந்து மாநிலம், மத்திய அரசு கருவூலங்களுக்கு பாதிப்பு இல்லாமல் செய்திருக்க வேண்டும்.

    ஜி.எஸ்.டி. சிறப்பானதாக, எளிமையாக இருக்க வேண்டும் என்றால் ஒரே ஒரு வரி விகிதம் மட்டுமே அதில் இருக்க வேண்டும்.

    பல நாடுகளில் ஒரே வரி விகிதத்தைதான் பின்பற்றுகிறார்கள். இதில் பிரச்சினை இருக்கும் என்று கருதினால் மாநில ஜி.எஸ்.டி., மத்திய ஜி.எஸ்.டி. என 2 முறைகளை கொண்டு வரலாம்.

    அப்படியும் சரி வராது என்றால் ஏற்கனவே உள்ள வரி முறைகளில் நன்மை, தீமைகளை ஆராய்ந்து சீர்படுத்தி புதிய வரி முறையை கொண்டு வந்திருக்க வேண்டும்.



    ஆனால், நிதி மந்திரி தலைமையிலான ஜி.எஸ்.டி. கவுன்சில் 5 விதமான வரி முறையை கொண்டு வந்துள்ளது. இது, பல்வேறு சிக்கல்களை உருவாக்கி விட்டது. இந்த வரி முறை அறிமுகப்படுத்தப்பட்ட போதே இது ஆபத்தையும், தெளிவற்ற நிலையையும் ஏற்படுத்தி விடும் என்று நான் கூறினேன்.

    என்னென்ன சிக்கல்கள் எல்லாம் ஏற்படும் என்பதை தீவிரமாக ஆராய்ந்து முடிவுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், அதை நிதி மந்திரி செய்யவில்லை. ஒரு திட்டத்தை அறிமுகம் செய்து விட்டு பின்னர் திரும்ப பெற்றால் அதை தோல்வியாகத்தான் கருத முடியும்.

    இப்போது 177 பொருட்களுக்கு வரிவிகிதத்தை திரும்ப பெற்று இருக்கிறார்கள். இது, நிச்சயமாக அவர்களின் தோல்வியை காட்டுகிறது.

    கே:- ஜி.எஸ்.டி.யில் பல குழப்பங்கள் நிலவுகிறது. இதை சீர்படுத்த முடியாது என்று கருதுகிறீர்களா?

    ப:- ஜி.எஸ்.டி. வரி முறை சிறப்பான ஒன்று. ஆனால், அதை நடைமுறைப்படுத்திய முறை சரியில்லை. இப்போது கூட நான் இது சம்பந்தமாக ஒரு ஆலோசனையை வழங்குகிறேன்.

    ஜி.எஸ்.டி. சம்பந்தமாக 2003-ம் ஆண்டு விஜய் கேல்கர் கமிட்டி அறிக்கையை தாக்கல் செய்தது. விஜய் கேல்கர் இந்த விவகாரத்தில் மிகவும் புத்திசாலி ஆனவர்.

    விஜய் கேல்கரை தலைவராக கொண்டு சிறிய குழு ஒன்றை அரசு அமைக்க வேண்டும். அதில் 2 அல்லது 3 பேர் இடம்பெறலாம். அந்த குழு அமைச்சரவையுடன் இணைந்து செயல்பட்டு ஆய்வு செய்ய வேண்டும். இதில் உள்ள நிறை குறைகளை முழுமையாக ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். இதற்கு 2 மாதம்கூட எடுத்து கொள்ளலாம்.

    டிசம்பர் அல்லது ஜனவரியில் இது சம்பந்தமாக முடிவு செய்து 2018 பட்ஜெட்டுக்கு ஏற்றார் போல் மாற்றங்களை செய்ய வேண்டும். இதை சிறப்பாகவும், எளிமையாகவும் மாற்றி அமைக்க முடியும்.

    கே:- இந்த வி‌ஷயங்களில் நீங்களும், உங்கள் மகன் ஜெயந்த் சின்காவும் மாறுபட்ட கருத்துக்களை கூறி வருகிறீர்களே?

    வாஜ்பாய், யஷ்வந்த் சின்கா

    ப:- நான் சந்திரசேகர், அத்வானி, வாஜ்பாய் போன்றவர்களிடம் அரசியல் பாடம் கற்று வளர்ந்தவன். ஜெயப் பிரகாஷ் நாராயணன் எனக்கு உந்து சக்தியாக இருந்தவர்.

    எனது தனிப்பட்ட உறவு, அரசியல் உறவு என்பது வெவ்வேறானது. நெருங்கிய நண்பர்களுக்குள்ளேயே அரசியல் ரீதியான மாறுபட்ட கருத்துக்கள் ஏற்படுவது வழக்கம். அதைபோல் தான் இதையும் கருதுகிறேன்.

    கே:- கடந்த மாதம் பேட்டி அளித்த போது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிய நீங்கள் நிதி மந்திரி அருண் ஜெட்லி பதவி விலக வேண்டும் என்று அப்போது சொல்லவில்லை. ஆனால், இப்போது அவர் பதவி விலக வேண்டும் என்று கூறுகிறீர்களே? ஏன் இந்த மனமாற்றம்?

    ப:- கடந்த மாதம் நான் கருத்துகள் கூறிய நேரத்தில் ஜி.எஸ்.டி. நடைமுறை செயல்பாடுகள் முழுமையாக வெளிவரவில்லை. ஆனால், இப்போது அது பெரும் குறைபாடுகளை கொண்டது என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. எனவே, நிதி மந்திரி அருண்ஜெட்லி இந்த பதவியில் தொடர கூடாது.



    கே:- நீங்கள் அரசியல் கலாச்சாரம் பற்றி பல்வேறு வி‌ஷயங்களை சுட்டி காட்டுகிறீர்கள். கடந்த கால அரசியலுக்கும், இப்போதுள்ள நிலைக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

    ப:- அரசியல் கலாச்சாரம் என்பது தனிப்பட்ட வாழ்க்கையும், அரசியல் வாழ்க்கையும் வெவ்வேறானதாகும். அதில் ஜனநாயக ரீதியாக ஒருமித்த கருத்துகள் இருக்க வேண்டும்.

    நான் பல தலைவர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். இந்த நடைமுறைதான் அதில் இருந்தது. யாரும் தங்களுடைய தனிப்பட்ட எண்ணத்தை சக ஆட்களிடமும், கட்சியிடமும் திணித்தது இல்லை.

    ஆனால், இப்போதுள்ள நடைமுறை முற்றிலும் மாறி இருக்கிறது. மத்திய அரசு வாய் சவடாலை மட்டும் வைத்து கொண்டு ஆட்சியை நடத்தி விட முடியாது. செயல்பாடுகளும் இருக்க வேண்டும்.

    கே:- 2019 பாராளுமன்ற தேர்தல் சம்பந்தமாக நீங்கள் கவலை கொண்டு இருக்கிறீர்களா?



    ப:- நிச்சயமாக கவலைப்படுகிறேன். கட்சியின் எதிர்காலம் பற்றி மிகவும் கவலையாக இருக்கிறது. 2014 திட்டங்களில் இருந்து 2019-க்கு தகுந்த மாதிரி முன்னேற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கட்சியின் நலனுக்காகத்தான் சில வி‌ஷயங்களை நான் கூறி வருகிறேன்.

    கே:- பிரதமரின் கட்டுப்பாட்டில் உள்ள அரசில் அங்கமாக இருக்கும் நிதி மந்திரி பதவி விலக வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. தோல்வி அடைந்து விட்டதாக சொல்கிறீர்கள். இப்படி குறை கூறும் நீங்கள் பாரதிய ஜனதாவில் எப்படி நீடிக்கிறீர்கள்?

    ப:- இதற்கு எளிமையாக பதில் கூறலாம். நான் எனது ரத்தத்தை இந்த கட்சிக்காக கொடுத்து கட்சியை வளர்த்தவன். இதே போல் பலரும் செய்து இருக்கிறார்கள். 2004-ல் பாரதிய ஜனதா ஆட்சி போன பிறகு 2014 வரை மத்திய காங்கிரஸ் அரசில் எத்தனையோ பிரச்சினைகளை சந்தித்து கட்சியை வளர்த்து இருக்கிறோம். அப்படிப்பட்ட நான் ஏன் கட்சியை விட்டு போக வேண்டும்?

    இவ்வாறு யஷ்வந்த் சின்கா கூறினார்.
    Next Story
    ×