search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    125 கோடி இந்தியர்களுக்கும் எப்படி வேலை கொடுக்க முடியும்?: ராகுல்காந்திக்கு அமித்ஷா கேள்வி
    X

    125 கோடி இந்தியர்களுக்கும் எப்படி வேலை கொடுக்க முடியும்?: ராகுல்காந்திக்கு அமித்ஷா கேள்வி

    125 கோடி இந்தியர்களுக்கும் எப்படி வேலை கொடுக்க முடியும்? என்று ராகுல்காந்திக்கு பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

    புதுடெல்லி:

    குஜராத் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக நடத்தி வரும் ராகுல்காந்தி பா.ஜ.க. மீதும், பிரதமர் மோடி மீதும் தினமும் புது, புது குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் சுமத்தி வருகிறார்.

    பிரதமர் மோடி தான் ஆட்சிக்கு வந்ததும் அனைவருக்கும் வேலை கொடுப்பேன் என்றார். ஆனால் அவர் இளைஞர்களின் வேலையைப் பறித்து விட்டார் என்று கூட்டம் தோறும் பேசுகிறார்.

    பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷாவிடம் இதுபற்றி நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு பதில் அளித்து அமித்ஷா கூறியதாவது:-

    குஜராத் இளைஞர்களுக்கு வேலை கொடுக்கவில்லை என்று ராகுல் பேசி வருகிறார். முதலில் வேலைக்கும், தொழில் செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை ராகுல் புரிந்து கொள்ள வேண்டும். ராகுல் நினைப்பது போல அவை இரண்டும் ஒன்றல்ல. வேறு வேறானவை.


    இந்தியாவில் 125 கோடி பேர் உள்ளனர். 125 கோடி பேருக்கும் அரசு எப்படி வேலை கொடுக்க முடியும். அது நடைமுறை சாத்தியம் இல்லாதது என்பது எல்லோருக்கும் தெரியும்.

    எனவே இளைஞர்களின் வேலை வாய்ப்பை அதிகரிக்க நாங்கள் அவர்களுக்கு சுய வேலை வாய்ப்பை உருவாக்கி வருகிறோம். இதை கருத்தில் கொண்டே முத்ரா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 9 கோடி பேர் பயன்பெற்று தொழில் செய்து வருகிறார்கள்.

    இதை ராகுல் நன்கு தெரிந்து கொண்டு பேச வேண்டும்.

    அடுத்து ஜி.எஸ்.டி. பற்றியும் ராகுல் குறை கூறி வருகிறார். ஜி.எஸ்.டி. அமல் படுத்தப்பட்டு 5 மாதங்களே ஆகிறது. அதில் வரி கணக்கு தாக்கல் உள்ளிட்ட பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாதமும் கூட்டம் நடத்துகிறோம். எனவே அடுத்த 5 மாதங்களில் ஜி.எஸ்.டி. பலன் கொடுக்க தொடங்கி விடும்.


    இதை பொறுத்து கொள்ள இயலாத ராகுல், பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்பதற்காக குஜராத்தில் சாதி அரசியலை தொடங்கி உள்ளார். குஜராத் மக்களை அவர் சாதி ரீதியாக பிரிக்கிறார். இது துரதிருஷ்ட வசமானது. அவர் தந்தையும் இப்படித்தான் சாதி அரசியல் செய்தார். இப்போது ராகுல் அதை பின்பற்றுகிறார்.

    ராகுல் என்னதான் சாதி அரசியல் செய்தாலும் அது குஜராத்தில் எடுபடாது. காங்கிரஸ் ஆண்டபோது மின்வெட்டு இருந்தது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் 1900 கிராமங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

    குஜராத்தை காங்கிரஸ் ஆண்ட வருடத்தில் 200 நாட்கள் 144 தடை உத்தரவு இருந்தது. பா.ஜ.க. ஆட்சியில் அத்தகைய தடை உத்தரவு இல்லை. அவர்கள் ஆண்டு பட்ஜெட் ரூ.10 ஆயிரம் கோடிக்குத்தான் போட்டனர். நாங்கள் ரூ.1 லட்சத்து 72 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் போட்டோம்.

    காங்கிரஸ் ஆளும் எந்த மாநிலத்தையும் குஜராத்துடன் ஒப்பிட முடியாது. இவை அனைத்துக்கும் மேலாக ராகுலுக்கு ஒரு சவால் விடுகிறேன். குஜராத்தில் காங்கிரஸ் சார்பில் உங்களால் முதல்-மந்திரி வேட்பாளரை அறிவிக்க முடியாமல் போனது ஏன்?

    இவ்வாறு அமித்ஷா கூறினார்.

    Next Story
    ×