search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ. பத்மகுமார் நியமனம்
    X

    கேரளாவில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ. பத்மகுமார் நியமனம்

    கேரளாவில் தேவசம்போர்டின் புதிய தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ. பத்மகுமாரும், உறுப்பினராக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் சங்கரதாசும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள பிரசித்திபெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பு திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு உள்ளது. இந்த அமைப்புக்கு ஒரு தலைவர் மற்றும் ஒரு உறுப்பினர் நியமிக்கப்படுவார்கள்.

    தேவசம் போர்டின் பதவி காலம் 3 ஆண்டுகள் ஆகும். கடந்த 2015-ம் ஆண்டு நவம்பரில் இருந்து தேவசம்போர்டு தலைவராக பிராயர் கோபாலகிருஷ்ணனும், அஜய்தரையில் உறுப்பினராகவும் பணியாற்றி வந்தனர்.

    இந்த நிலையில் தேவசம்போர்டின் பதவி காலத்தை 2 ஆண்டுகளாக குறைத்து மாநில அரசு சட்டம் கொண்டு வந்தது. இதனால் அவர்கள் இருவரும் தங்கள் பதவியை இழந்தனர்.

    இந்த சட்டத்திற்கு கேரள எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதற்கிடையில் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க கோரி கவர்னர் சதாசிவத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அதில் சில விளக்கங்கள் கேட்டு கவர்னர் திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதை தொடர்ந்து கேரள தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் கவர்னரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார். அதன் பிறகு இந்த சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் வழங்கினார்.

    இதைதொடர்ந்து தேவசம்போர்டின் புதிய தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ. பத்மகுமாரும், உறுப்பினராக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் சங்கரதாசும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    சபரிமலையில் மண்டல பூஜைக்காக இன்று நடை திறக்கும் சூழ்நிலையில் தேவசம்போர்டு தலைவர் மற்றும் உறுப்பினர் மாற்றப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் முன்னாள் தேவசம் போர்டு தலைவர் பிராயர் கோபாலகிருஷ்ணன் இடையே சபரிமலை கோவில் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட மோதலே இந்த மாற்றத்திற்கு காரணம் என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
    Next Story
    ×