search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் 3,565 பெண்களுக்கு ஒரு பெண் போலீஸ்: கணக்கெடுப்பில் தகவல்
    X

    இந்தியாவில் 3,565 பெண்களுக்கு ஒரு பெண் போலீஸ்: கணக்கெடுப்பில் தகவல்

    இந்தியாவில் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில், 3565 பெண்களுக்கு ஒரு பெண் போலீஸ் இருப்பது தெரியவந்துள்ளது.
    புதுடெல்லி:

    பெண்களிடம் குற்ற புலனாய்வு விசாரணை நடத்த பெண் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களின் எண்ணிக்கையோ ஆண் போலீசாரைவிட மிகவும் குறைவு.

    போலீஸ் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் சமீபத்திய கணக்கெடுப்பின்படி இந்தியா முழுவதும் 24 லட்சம் போலீசார் பணியில் உள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 60 ஆயிரம் பெண் போலீசார் அடங்குவர்.

    அவர்களில் 1 லட்சத்து 40 ஆயிரம்பேர் சிவில் போலீஸ் பிரிவிலும், 24,335 பேர் ஆயுதப்படை பிரிவிலும் பணிபுரிகின்றனர்.

    நமது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 58 கோடியே 60 லட்சம் பெண்கள் உள்ளனர். ஆனால் அவர்களின் பாதுகாப்புக்கு போதிய அளவில் பெண் போலீசாரின் எண்ணிக்கை இல்லை.

    தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 3,565 பெண்களுக்கு ஒரு பெண் போலீஸ் என்ற விகிதமே உள்ளது.

    கர்நாடகாவில் 3.49 சதவீதமும், கேரளாவில் 2.82 சதவீதமும், குஜராதில் 3.92 சதவீதமும், ஆந்திரபிரதேசத்தில்1.47 சதவீதமும் பெண் போலீசார் உள்ளனர். 13 மாநிலங்களில் 1 சதவீதமும் 7 மாநிலங்களில் 1 சதவீதத்துக்கு அதிகமாகவும், 2 சதவீதத்துக்கு குறைவான எண்ணிக்கையிலும் பெண் போலீசார் உள்ளனர்.

    அதேநேரத்தில் 9 மாநிலங்களில் இன்னும் பெண் போலீசாரே நியமிக்கப்படவில்லை. இவை அனைத்தையும் ஒப்பிடும்போது தமிழ்நாடு மற்றும் மராட்டியத்தில் அதிக அளவில் பெண் போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மராட்டியத்தில் 19 சதவீதமும், தமிழ்நாட்டில் 12 சதவீதமும் பெண் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    உள்துறை அமைச்சக கணக்கெடுப்பின்படி 2016-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான 2 லட்சத்து 38 ஆயிரம் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கற்பழிப்பு புகார், மானபங்கம், செக்ஸ் சித்ரவதை உள்ளிட்டவை அதில் அடங்கும். ஆனால் இவற்றின் மீது விசாரணை நடத்த போதிய அளவில் பெண் போலீசார் இல்லை. எனவே கூடுதலான பெண் போலீசாரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
    Next Story
    ×