search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத்தில் 11 இந்து ஆலயங்களுக்கு சென்று ராகுல்காந்தி வழிபாடு
    X

    குஜராத்தில் 11 இந்து ஆலயங்களுக்கு சென்று ராகுல்காந்தி வழிபாடு

    குஜராத் சட்டசபை தேர்தலையையொட்டி பிரசாரம் செய்துவரும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, கடந்த 1½ மாதங்களில் 11 பெரிய இந்து ஆலயங்களுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.
    ஆமதாபாத்:

    குஜராத் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    இந்த தடவை அதிக இடங்களில் வென்று குஜராத் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி மிகவும் தீவிரமாக உள்ளார். இதற்காக அவர் தேர்தல் பிரசாரத்தின் தலைமை பொறுப்பை ஏற்று ஆதரவு திரட்டி வருகிறார்.

    குஜராத்தில் கடந்த செப்டம்பர் மாதமே ராகுல்காந்தி பிரசாரத்தை தொடங்கி விட்டார். கடந்த 50 நாட்களில் அவரது பிரசாரம் தீவிரமாகி உள்ளது. அதுமட்டுமின்றி இதுவரை மற்ற மாநிலங்களில் செய்த பிரசாரங்களில் இருந்து குஜராத்தில் அவர் செய்யும் பிரசாரம் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.

    உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தபோது ராகுல்காந்தி இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் வழிபாட்டு தலங்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். எந்த ஊரில் பொதுக்கூட்டம் நடந்தாலும் அங்குள்ள அனைத்து மத தலங்களுக்கும் சென்றார்.



    ஆனால் குஜராத்தில் ராகுல் காந்தி இந்து மத கோவில்களுக்கு மட்டும் சென்று வழிபட்டு பிரசாரத்தை மேற்கொள்கிறார். கடந்த 1½ மாதங்களில் அவர் 11 பெரிய இந்து ஆலயங்களுக்கு சென்று வந்துள்ளார்.

    அதிலும் அவர் ஒவ்வொரு பகுதியிலும் பெரும்பான்மை இனத்தவர்களால் வழிபடும் கோவில்களுக்கு செல்கிறார். சமீபத்தில் அவர் பன்சகந்தா என்னும் ஊரில் அம்பாஜி கோவிலுக்கு சென்றார். இந்திராகாந்தி குஜராத்தில் பிரசாரத்தை தொடங்கும் போதெல்லாம் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு விட்டு பிரசாரத்தை தொடங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். அதே பாணியை தற்போது ராகுலும் கடைபிடித்துள்ளார்.

    ராகுல்காந்தியின் இந்த புதிய அணுகுமுறை குஜராத் மாநில வாக்காளர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. அவர் ஆலயங்களுக்கு சென்று நெற்றியில் திலகமிட்டபடி பிரசாரம் செல்வதை குஜராத் மக்கள் வரவேற்கிறார்கள்.

    எனவே வரும் நாட்களில் மேலும் பல கோவில்களுக்கு செல்ல ராகுல்காந்தி முடிவெடுத்துள்ளார். அடுத்து 5-வது கட்ட பிரசாரத்தை நடத்த உள்ள ராகுல் மேலும் 25 கோவில்களுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    ராகுல்காந்தி குஜராத்தில் உள்ள முக்கிய இந்து ஆலயங்களுக்கு செல்வது பா.ஜ.க. தலைவர்களுக்கு எரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதற்காக ராகுல்காந்தியை அவர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

    ராகுல்காந்தி முழு மனதுடன் ஆலயத்துக்கு செல்ல வேண்டும். தேர்தலுக்காக மட்டும் செல்வது நாடகமாகும் என்று பா.ஜ.க.வினர் குற்றம் சாட்டுகின்றனர்.

    இதற்கு ராகுல்காந்தி நேற்று பதிலடி கொடுத்தார். அவர் இது தொடர்பாக கூறுகையில், “நான் சிவ பக்தன், சிவனை நம்புகிறேன். உண்மையை நம்புகிறேன். பா.ஜ.க.வினர் என்னை பற்றி என்ன சொன்னாலும் பரவாயில்லை. எனக்கு உணமையில் நம்பிக்கை உள்ளது” என்றார்.
    Next Story
    ×