search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமர் கோவில் கட்ட ஆயத்த பணி வருகிற 5-ந்தேதி தொடங்கும்: அகாரா பரி‌ஷத் அமைப்பு அறிவிப்பு
    X

    ராமர் கோவில் கட்ட ஆயத்த பணி வருகிற 5-ந்தேதி தொடங்கும்: அகாரா பரி‌ஷத் அமைப்பு அறிவிப்பு

    ஷியா முஸ்லிம்களுடன் நடந்த பேச்சுவார்த்தையின் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதை அடுத்து ராமர் கோவில் கட்ட ஆயத்த பணி வருகிற 5-ந்தேதி தொடங்கும் என அகாரா பரி‌ஷத் அமைப்பு அறிவித்துள்ளது.
    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்ததாக ராமாயண இதிகாசத்தில் கூறப்பட்டுள்ளது.

    அயோத்தியில் உள்ள சிறு குன்று ஒன்றில் பாபர் மசூதி கட்டப்பட்டு இருந்தது. இந்த இடத்தில் முன்பு ராமர் கோவில் இருந்ததாகவும், அதை இடித்து விட்டு மசூதி கட்டப்பட்டதாகவும் இந்துக்கள் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் 1992-ம் ஆண்டு அயோத்தியில் ஒன்று திரண்ட கரசேவகர்கள் பாபர் மசூதியை இடித்து விட்டு அந்த இடத்தில் சிறு அளவிலான ராமர் கோவிலை அங்கு உருவாக்கினார்கள்.

    தற்போது அங்குள்ள 2.77 ஏக்கர் நிலம் சர்ச்சைக்குரிய பதியாக அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த இடத்துக்கு இந்து அமைப்பான அகில பாரத அகாரா பரி‌ஷத் அமைப்பு, ஷியா வக்பு வாரியம், சன்னி வக்பு வாரியம் ஆகியவை உரிமை கொண்டாடின.

    இது சம்பந்தமாக வழக்கு தொடரப்பட்டது. அது, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    இதற்கிடையே அந்த இடத்தில் பெரிய அளவில் ராமர் கோவில் கட்ட தொடர்ந்து ஏற்பாடுகள் நடந்து வந்தன. கோர்ட் டுக்கு வெளியே சமரச அடிப்படையில் இதற்கு தீர்வு காணவும் பேச்சு வார்த்தைகள் நடந்து வந்தது.

    சில நாட்களுக்கு முன்பு உத்தரபிரதேச முதல்- மந்திரியோகி ஆதித்யநாத் அயோத்தி வந்திருந்தார்.

    இதையடுத்து ஷியா முஸ்லிம் அமைப்பின் தலைவர் வாசிம் ரிஷ்வி, முதல்-மந்திரியோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேசினார்.

    அப்போது கோர்ட்டுக்கு வெளியே சமரச அடிப்படையில் அயோத்தி கோவில் பிரச்சினைக்கு தீர்வு காண தயாராக இருப்பதாக வாசிம் ரிஷ்வி, யோகி ஆதித்யநாத்திடம் கூறினார்.

    அதை ஏற்று கொண்ட யோகி ஆதித்யநாத் இரு தரப்பினரும் சமரச அடிப்படையில் தீர்வை எட்டுங்கள். ராமர் கோவில் மற்றும் மசூதி ஆகியவற்றை எங்கு கட்டுவது? என்று முடிவு எடுங்கள் என்று கூறி இருந்தார்.

    இதைத்தொடர்ந்து அகாரா பரி‌ஷத் தலைவர் நரேந்திர கிரி, வாசிம் ரிஷ்வி ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.

    நேற்று முன்தினம் இதன் 2-வது கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது அயோத்திக்கு வெளியே பைசாபாத் அல்லது முஸ்லிம்கள் அதிகம் வாழும் வேறு ஒரு இடத்தில் பாபர் மசூதியை கட்டுவது என்றும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதிப்பது என்றும் முடிவு செய்தனர்.

    இது சம்பந்தமாக நரேந்திர கிரி கூறியதாவது:-

    ஷியா முஸ்லிம்களுடன் நடந்த பேச்சுவார்த்தையின் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அவர்கள் அயோத்தியில் மசூதியை கட்ட வேண்டும் என்று கூறினார்கள்.

    அயோத்தியில் ஏற்கனவே போதுமான மசூதிகள் உள்ளன. எனவே, அயோத்திக்கு வெளியே வேறு இடத்தில் கட்டுங்கள் என்று கேட்டு கொண்டோம். அதை அவர்கள் ஏற்று கொண்டனர்.

    அடுத்த கட்டமாக இதில் தொடர்புடைய சன்னி வக்பு வாரிய குழுவினரிடமும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். இதிலும் தீர்வு எட்டப்படும்.

    இதைத்தொடர்ந்து டிசம்பர் 5-ந்தேதி ராமர் கோவில் கட்டுவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சன்னி முஸ்லிம் அமைப்புடன் நாளை மறுநாள் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்த பேச்சுவார்த்தையை வாழும் கலை நிபுணர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் முன்னின்று நடத்துகிறார்.

    இதற்காக ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் நாளை மறுநாள் அயோத்தி செல்கிறார். அப்போது இதில் முடிவு எட்டப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஷியா வக்பு வாரியம் பேச்சுவார்த்தை நடத்தி எடுத்த முடிவுக்கு முக்கிய முஸ்லிம் தலைவரான இக்பால் அன்சாரி என்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    அயோத்தி பிரச்சினை தொடர்பாக 1960-ம் ஆண்டு இவரது தந்தை ஹசிம் அன்சாரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் இறந்து விட்டார். அந்த வழக்கை இக்பால் அன்சாரி தொடர்ந்து நடத்தி வருகிறார்.

    அவர் இதுபற்றி கூறும் போது, ஷியா வக்பு வாரியம் எடுத்த முடிவை அயோத்தியில் உள்ள, மற்றும் நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
    Next Story
    ×