search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாட்டிலேயே குஜராத்தில் தான் ஊழல் தலைவிரித்தாடுகிறது: ராகுல்காந்தி
    X

    நாட்டிலேயே குஜராத்தில் தான் ஊழல் தலைவிரித்தாடுகிறது: ராகுல்காந்தி

    நாட்டிலேயே பாரதிய ஜனதா ஆளும் குஜராத் மாநிலத்தில் தான் ஊழல் அதிக அளவில் தலைவிரித்து ஆடுவதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
    அகமதாபாத்:

    குஜராத் மாநில சட்டசபை தேர்தலையொட்டி அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி வடக்கு குஜராத் பகுதியில் நவசர்ஜன் என்ற பெயரில் யாத்திரை நடத்தி வருகிறார். அதில் 2-வது நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராகுல்காந்தி பேசியதாவது:-

    பிரதமர் நரேந்திரமோடி ஊழலுக்கு எதிராக போராடி கொண்டிருப்பதாக தொடர்ந்து சொல்லி வருகிறார். ஆனால் பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் நடக்கும் ஊழல்களை அவர் கண்டுகொள்வதில்லை.

    நாட்டிலேயே பாரதிய ஜனதா ஆளும் குஜராத் மாநிலத்தில் தான் ஊழல் அதிக அளவில் தலைவிரித்து ஆடுகிறது. சூரத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் என்னிடத்தில் சில வி‌ஷயங்களை கூறினார். இங்கு ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒரு தடவை போலீசார் வியாபாரியிடம் வந்து மாமூல் வசூலிப்பதாக அவர் தெரிவித்தார்.

    ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறும், நரேந்திர மோடியின் பேச்சுக்கும், உண்மையில் நாட்டில் நடக்கும் செயலுக்கும் சம்மந்தம் இல்லாமல் இருக்கிறது.



    அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா நிறுவனத்தின் விற்று முதல் வர்த்தகம் (டர்ன் ஓவர்) 2014-ல் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்ததும் ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.80 கோடியாக அதிகரித்து இருக்கிறது. இது நிச்சயம் ஊழல் மற்றும் முறைகேடுகளால் தான் நடந்திருக்க முடியும் என்று குஜராத் மக்கள் நன்கு அறிவார்கள்.

    குஜராத் மாநில முதல்-மந்திரி பங்கு வர்த்தகத்தில் முறைகேடு செய்ததாக சமீபத்தில் பங்கு சந்தை கட்டுப்பாட்டு வாரியம் ரூ.15 லட்சம் அபராதம் விதித்துள்ளது. அவர் நேர்மையான மனிதராக நடந்து கொள்ளவில்லை என்பதை இது காட்டுகிறது.

    நான் ஊழல் செய்யமாட்டேன். யாரையும் ஊழல் செய்யவிடமாட்டேன் என்று பிரதமர் மோடி கூறி வருகிறார். ஜெய்ஷாவும், விஜய் ரூபானியும் செய்த செயல்கள் பற்றி பிரதமர் மோடி வாய் திறக்க வேண்டும். அவர் இதில் அமைதி காக்க கூடாது.

    ‘நானும் பேச மாட்டேன். யாரையும் பேச விடவும் மாட்டேன்’ என்ற புதிய வாக்கியத்தை வேண்டுமானால் இப்போது மோடிக்கு பொருந்துவதாக இருக்கும்.

    ஆனால் மக்கள் நீங்கள் (மோடி) இந்த வி‌ஷயத்தில் உங்கள் கருத்தை சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அப்படி நீங்கள் சொல்லவில்லை என்றால், நீங்கள் காவலாளி அல்ல, நீங்களும் கூட்டாளி என்றுதான் மக்கள் நினைப்பார்கள்.

    சில பொருட்களுக்கு மட்டும் ஜி.எஸ்.டி. வரியை அதிகமாக வைத்திருப்பதை குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றையும் சீரான வரி விகிதத்திற்குள் கொண்டுவர வேண்டும்.

    இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.
    Next Story
    ×