search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் ஜாமீனில் வெளியேவந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர் குத்திக்கொலை
    X

    கேரளாவில் ஜாமீனில் வெளியேவந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர் குத்திக்கொலை

    கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர் கொலை வழக்கில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த பா.ஜ.க. பிரமுகர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவின் குருவாயூர் மாவட்டம் நென்மினியைச் சேர்ந்தவர் ஆனந்த் (23). ஆர்எஸ்எஸ் தொண்டர் இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற காசிம் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர் கொலை வழக்கில் 2-வது குற்றவாளியாவார். சமீபத்தில் அவர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.   

    இந்நிலையில், நேற்று மதியம் திருச்சூர் பகுதியில் ஆனந்த் தனது நண்பருடன் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் காரில் வந்த ஒரு கும்பல் அவரது பைக் மீது மோதியது. இதையடுத்து அவர்கள் இருவரும் கீழே தடுமாறி விழுந்துள்ளனர். அந்த காரில் இருந்து இறங்கியவர்கள் ஆனந்தை கூர்மையான ஆயுதங்களை கொண்டு சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதிக்கு விரைந்த போலீசார் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த ஆனந்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்தான் காரணம் என பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

    இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×