search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தான்: அரசு எச்சரிக்கையை மீறி 6-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 14 டாக்டர்கள் கைது
    X

    ராஜஸ்தான்: அரசு எச்சரிக்கையை மீறி 6-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 14 டாக்டர்கள் கைது

    ராஜஸ்தானில் அரசு எச்சரிக்கையை மீறி கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆறாவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 14 டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் டாக்டர்கள், சம்பள உயர்வு உள்ளிட்ட 33 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் அரசு அவர்களது கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.

    இதற்கிடையே, தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு நிர்வாகத்தை கண்டித்து சுமார் 640-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனை டாக்டர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது போராட்டத்தால் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்றுவந்த உள் மற்றும் வெளி நோயாளிகள் அவதிப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள் வெள்ளிக்கிழமை இரவுக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் அவ்வாறு பணிக்கு திரும்பாத டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இருப்பினும் மாநில அரசின் இந்த எச்சரிக்கையை மீறி சில டாக்டர்கள் தொடர்ந்து ஆறாவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 14 டாக்டர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று 6 பேரும், இன்று 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது நடவடிக்கைக்கு பயந்து 100க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிரச்சனைகளை சுமூகமாக தீர்க்க பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மாநில சுகாதாரத்துறை மந்திரி காலி சரண் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து நாளை மதியம் 2 மணிக்கு ஐந்து டாக்டர்கள் கொண்ட குழுவினர் மந்திரியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×