search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காற்று மாசு எதிரொலி: டெல்லியில் கட்டுமான பணிகள், தொழில்துறை நடவடிக்கைகளுக்கு தடை
    X

    காற்று மாசு எதிரொலி: டெல்லியில் கட்டுமான பணிகள், தொழில்துறை நடவடிக்கைகளுக்கு தடை

    டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டு உள்ளதால் அங்கு கட்டுமான பணிகள் மற்றும் தொழில்துறை நடவடிக்கைகள் மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்து உள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டு உள்ளதால் அங்கு கட்டுமான பணிகள் மற்றும் தொழில்துறை நடவடிக்கைகள் மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்து உள்ளது.

    டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்திய பகுதிகளில் காற்று கடுமையாக மாசடைந்துள்ளது. காற்றில் நுண்துகள்களின் (பி.எம்.2.5 மற்றும் பி.எம்.10) அளவு வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நச்சுக்காற்றால் மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

    பனிப்பொழிவும் அதிகம் இருப்பதால் தலைநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பகலிலும் மேகமூட்டம் போல காணப்படுகிறது. அருகில் இருக்கும் பொருட்களையோ, நபர்களையோ கூட மக்களால் பார்க்க முடியவில்லை. இதனால் சாலைகளில் தொடர் விபத்துகள் அரங்கேறி வருகின்றன.

    டெல்லியில் நிலவும் இந்த சுற்றுச்சூழல் அவசர நிலையால் குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், எனவே இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரியும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

    இந்த வழக்கை தீர்ப்பாய தலைவர் நீதிபதி சுவாதந்தர் குமார் நேற்று விசாரித்தார். அப்போது டெல்லி காற்று மாசுபாட்டை போக்க நடவடிக்கை எடுக்காத மாநில அரசுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார். பின்னர் இது தொடர்பாக பல்வேறு தடை உத்தரவுகளை அவர் பிறப்பித்தார்.

    அதன்படி டெல்லியில் அடுத்த உத்தரவு வரும் வரை கட்டுமான நடவடிக்கைகளுக்கும், அதிக மாசுக்களை உமிழும் தொழில்துறை நடவடிக்கைகளுக்கும் 14-ந் தேதி வரை தடை விதிக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த லாரிகளும், கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகளும் நகருக்குள் நுழைய தடை போடப்பட்டது. அத்துடன் குப்பைகளை எரிப்பதற்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இதற்கிடையே டெல்லி மாசு தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த ஐகோர்ட்டு, டெல்லியில் மாசுக்களை உடனடியாக கட்டுப்படுத்த ‘மேக விதைப்பு’ மூலம் செயற்கை மழையை உருவாக்குவது குறித்து பரிசீலிக்குமாறு அரசை கேட்டுக்கொண்டது.

    ஐகோர்ட்டின் அறிவுறுத்தலை ஏற்று டெல்லியில் வருகிற 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை வாகனங்களுக்கான ஒற்றைப்படை, இரட்டைப்படை பதிவு (திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் ஒற்றைப்படை பதிவு எண் வாகனங்களும், செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் இரட்டைப்படை வாகனங்களும் இயக்கப்படும்) முறை அமல்படுத்தப்படும் என மாநில போக்குவரத்து மந்திரி கைலாஷ் கெலாட் கூறியுள்ளார்.

    டெல்லியில் நிலவும் காற்று மாசு பிரச்சினையை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ள தேசிய மனித உரிமை ஆணையம், இது குறித்து 2 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய-மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் பயிர்க்கழிவுகளை எரித்து வரும் பஞ்சாப், அரியானா மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக ஆணையம் கூறி இருக்கிறது. 
    Next Story
    ×