search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் புகழேந்தி வீட்டில் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை
    X

    கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் புகழேந்தி வீட்டில் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை

    கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் புகழேந்தி வீட்டில் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனையிட்டு வரும் சம்பவம் தினகரன் ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பெங்களூரு:

    கர்நாடக மாநில அ.தி.மு.க. அம்மா அணி செயலாளராக இருப்பவர் புகழேந்தி. இவர் கட்சியின் செய்தி தொடர்பாளராகவும் உள்ளார். தமிழகத்தில் தினகரன் அணி சார்பில் நடந்த பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று ஆவேசமாக பேசி வந்தார்.

    தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் ரிசார்ட்டில் தங்கியிருந்தபோது அவர்களுக்கு தேவையான முழு வசதிகளையும் செய்து கொடுத்தார்.

    இரட்டை இலையை மீட்க தினகரன் அணி சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரவும், பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வந்தார். சேலத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தினகரன் அணியினர் துண்டு பிரசுரம் விநியோகித்தது தொடர்பாக அவர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    புகழேந்தியின் வீடு பெங்களூரு முருகேஷ்பாளையம் முனுசாமப்பா லே-அவுட் பகுதியில் உள்ளது. 3 மாடி கொண்ட சொந்த வீட்டில் அவர் வசித்து வருகிறார். தனியாக பள்ளிக்கூடமும் நடத்தி வருகிறார். மகன் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் இன்று காலை புகழேந்தியும், அவரது மகனும் நடைபயிற்சி சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பினர். பின்னர் வழக்கம்போல பூப்பந்து விளையாட தயாராகினர். அப்போது கார்களில் ஒரு பெண் அதிகாரி உள்பட 11 பேர் கொண்ட குழுவினர் அதிரடியாக வீட்டிற்கு வந்தனர்.


    பெங்களூரில் உள்ள புகழேந்தி வீட்டை படத்தில் காணலாம்.


    இதைப்பார்த்த புகழேந்தி நீங்கள் யார்? என்று கேட்டார். அப்போது தாங்கள் வருமானவரி துறை அதிகாரிகள் என்றும், வீட்டில் சோதனை நடத்த வந்திருப்பதாகவும் கூறினர்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த புகழேந்தி சுதரிப்பதற்குள் அதிகாரிகள் அதிரடியாக வீட்டிற்குள் புகுந்தனர். பின்னர் வீட்டின் உள்பக்கமாக கதவை தாழிட்ட அவர்கள் புகழேந்தி மற்றும் அவர் மகனிடம் இருந்த 4 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையிலும் அங்குலம் அங்குலமாக வருமானவரி துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள். தகவலறிந்த புகழேந்தியின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டதால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    தொடர்ந்து இன்று மாலை வரை சோதனை நடைபெறும் என கூறப்படுகிறது. சோதனை முடிவில்தான் வீட்டில் வருமானத்திற்கு அதிகமாக பணம் மற்றும் பொருட்கள், ஆவணங்கள் ஏதும் சிக்கியதா? என்பது தெரியவரும். இந்த சோதனையால் தினகரன் ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×