search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை - நாட்டு மக்கள் கருத்து தெரிவிக்க பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு
    X

    ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை - நாட்டு மக்கள் கருத்து தெரிவிக்க பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு

    ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையின் முதலாண்டு நிறைவில், நாட்டு மக்கள் கருத்து தெரிவிக்க பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
    புதுடெல்லி:

    ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையின் முதலாண்டு நிறைவில், நாட்டு மக்கள் கருத்து தெரிவிக்க பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடி ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என அறிவித்து, காகித பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து நேற்றுடன் ஓராண்டு நிறைவு அடைந்துள்ளது.

    கருப்பு பணத்தை ஒழித்துக்கட்டவும், கள்ள நோட்டுகளை ஒழிக்கவும், பயங்கரவாதத்துக்கு செல்கிற நிதியை தடுத்து நிறுத்தவும் இந்த நடவடிக்கை உதவும் என்பது பிரதமர் மோடியின் நம்பிக்கை.



    ஆனால் இதை கடுமையாக விமர்சிக்கிற காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 18 கட்சிகள் நேற்று கருப்பு தினம் கடைப்பிடித்தன. இது தொடர்பாக அவர்கள் பல்வேறு வகையிலான போராட்டங்களை நடத்தினார்கள். அவர்களுக்கு பதிலடி தந்து, பாரதீய ஜனதா கட்சியினரும் கருப்பு பண எதிர்ப்பு தினம் என அறிவித்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.

    இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களிடம் இணையதளம் வழியாக ஒரு கருத்துக்கணிப்பு நடத்துகிறார். ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு, இந்த கருத்துக்கணிப்பில் பதில் அளிக்குமாறு அவர் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “ஊழலையும், கருப்பு பணத்தையும் அடியோடு ஒழித்துக்கட்ட எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்த கருத்துக்கணிப்பு வாயிலாக எனக்கு சொல்லுங்கள். நீங்கள் பதில் அளிக்க இணையதளத்தில் செல்ல வேண்டிய முகவரி http://nm4.in/dnldapp.

    மற்றொரு டுவிட்டர் பதிவில், “ஊழலையும், கருப்பு பணத்தையும் ஒழித்துக்கட்டுவதற்கு அரசால் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை உறுதியுடன் ஆதரித்த நாட்டு மக்களுக்கு நான் தலை வணங்குகிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    குஜராத் மாநிலம், சூரத் நகரில் நேற்று தீவிரமான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா, ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக, தொண்டர்களுடன் மாபெரும் கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்தினார்.

    மேலும் அவர் டுவிட்டரில் ஒரு பதிவையும் வெளியிட்டார். அதில் அவர், “கருப்பு பண எதிர்ப்பு தினம்... ஊழலையும், கருப்பு பணத்தையும் ஒழித்துக்கட்டி, புதிய இந்தியாவை உருவாக்குவதில் பிரதமர் நரேந்திர மோடி கொண்டுள்ள உறுதியை ஆதரித்து தேசிய அளவில் நடைபெறுகிற கையெழுத்து இயக்கத்தில் இணைந்தேன்” என குறிப்பிட்டுள்ளார்.

    மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், நிதின் கட்காரி, ஸ்மிரிதி இரானி, மேனகா காந்தி, பியூஸ் கோயல் ஆகியோரும் டுவிட்டரில் ஆதரவு தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.

    டுவிட்டரில் பதிவு வெளியிட்டவர்களில் பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அணி தலைவர் பூனம் மகாஜன் எம்.பி.யும் அடங்குவார். 
    Next Story
    ×