search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு சம்பள உயர்வுக்கு சிபாரிசு
    X

    சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு சம்பள உயர்வுக்கு சிபாரிசு

    சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகளின் சம்பள உயர்வுக்கான சிபாரிசு, மத்திய மந்திரிசபையின் ஒப்புதலுக்காக காத்து இருக்கிறது.
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகளின் சம்பள உயர்வுக்கான சிபாரிசு, மத்திய மந்திரிசபையின் ஒப்புதலுக்காக காத்து இருக்கிறது.

    சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகளில் பணியாற்றுகிற நீதிபதிகளுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதத்தை சுப்ரீம் கோர்ட்டின் தலைமைச்செயலாளருக்கும், ஐகோர்ட்டுகளின் தலைமைப்பதிவாளருக்கும் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அனுப்பி உள்ளது.



    இதன்படி இந்த நீதிபதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிற அகவிலைப்படி 136 சதவீதத்தில் இருந்து 139 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இது கடந்த ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    இந்த அகவிலைப்படி உயர்வு, 6-வது சம்பள கமிஷன் அடிப்படையிலானது என்பது குறிப்பிடத்தக்கது.

    சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு 7-வது சம்பள கமிஷனின் சிபாரிசுகள் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. தற்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், எல்லா பிடித்தமும் போக மாதம் ஒன்றுக்கு ரூ.1½ லட்சம் சம்பளம் பெறுகின்றனர். தலைமை நீதிபதி இதைவிட அதிகமாக பெறுகிறார்.

    ஐகோர்ட்டு நீதிபதிகளின் சம்பளம், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் சம்பளத்தை விட குறைவு.

    7-வது சம்பள கமிஷன் சிபாரிசுகளை சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு நடைமுறைப்படுத்துவது பற்றி மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

    இதற்கிடையே கடந்த ஆண்டு, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த டி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் குழு பரிந்துரையின்படி சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். நீதிபதிகள் குழுவானது, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு ரூ.2 லட்சத்து 80 ஆயிரமும், ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரமும் சம்பளம் வழங்க வேண்டும் என்று சிபாரிசு செய்துள்ளது.

    மேலும் கடந்த வாரம், சுப்ரீம் கோர்ட்டு ஊழியர்கள், அதிகாரிகளுக்கு சலவைப்படி வழங்குவது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வர், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர், 7-வது சம்பள கமிஷன் சிபாரிசுபடி சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு சம்பள உயர்வு எப்போது வழங்கப்படும் என மத்திய அரசின் கூடுதல் துணை தலைமை வக்கீல் பி.எஸ்.நரசிம்மாவிடம் கேள்வி எழுப்பினர்.

    இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு சம்பள உயர்வு வழங்க 7-வது சம்பள கமிஷனில் செய்யப்பட்டுள்ள சிபாரிசுகள் அடிப்படையில் 2 மசோதாக்கள் தயார் நிலையில் உள்ளன. அவை, மத்திய மந்திரிசபையின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த மசோதாக்கள் மத்திய மந்திரிசபையின் ஒப்புதலுக்கு பின்னர் வரும் குளிர்கால கூட்டத்தொடரில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

    சுப்ரீம் கோர்ட்டில் 31 நீதிபதிகள் பணி இடங்களும், நாட்டில் உள்ள 24 ஐகோர்ட்டுகளில் 1,079 நீதிபதிகள் பணி இடங்களும் உள்ளன. அவற்றில் சில இடங்கள் இப்போது காலியாக உள்ளன. 
    Next Story
    ×