search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா கட்சியில் இருந்து விலகிய முகுல் ராய் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்
    X

    மம்தா கட்சியில் இருந்து விலகிய முகுல் ராய் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்

    மேற்கு வங்காளத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து சமீபத்தில் விலகிய முகுல் ராய் புதுடெல்லியில் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் முன்னிலையில் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்.
    புதுடெல்லி:

    மேற்கு வங்காளம் மாநிலத்தை ஆட்சியை செய்யும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் முகுல் ராய். பாராளுமன்ற மேல்சபை உறுப்பினராகவும் பதவி வகித்துவரும் இவர், மம்தா பானர்ஜிக்கு அடுத்தபடியாக துணைத்தலைவராகவும் பதவி வகித்தார். அக்கட்சியின் இரண்டாவது தலைவராக மதிக்கப்பட்டு வந்தார்.

    சமீபகாலமாக பா.ஜ.க. மேலிடத் தலைவர்களுடன் முகுல் ராய் ரகசிய தொடர்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் பதவியில் இருந்தும், பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் முகுல் ராய் விடுவிக்கப்பட்டதாக மம்தா பானர்ஜி அறிவித்தார்.

    ஆளும்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான ’ஜகோ பங்களா’ பத்திரிகை அலுவலகத்தில் கடந்த 19-ம் தேதி  துர்கா பூஜையையொட்டி நடைபெற்ற பூஜையில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். முகுல்ராய் மட்டும் பங்கேற்கவில்லை.

    கடந்த மாதம் 25-ம் தேதி கொல்கத்தா நகரில் பத்திரிகையாளர்களை சந்தித்த முகுல் ராய், ’கனத்த மனதுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கட்சி தொடங்கிய ஆரம்பகாலத்தில் உறுப்பினர் படிவத்தில் கையொப்பமிட்ட முக்கிய நபர்களில் நானும் ஒருவன் என்ற முறையில் கட்சியின் செயற்குழுவில் இருந்து விலகும் இந்த முடிவை மிகவும் கனத்த மனதுடன் அறிவிக்கிறேன்.

    எனது இந்த முடிவுக்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக துர்கா பூஜை முடிந்த பின்னர் வெளிப்படையாக தெரிவிப்பேன்’ என குறிப்பிட்டார்.

    துர்கா பூஜை விழாவின்போது மக்கள் சர்ச்சைகளை விரும்புவதில்லை என்பதால் துர்கா பூஜைக்கு பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும், கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து முகுல் ராய் எம்.பி. ஆறாண்டுகளுக்கு நீக்கம் செய்யப்பட்டதாக அக்கட்சியின் தலைமை அறிவித்தது.

    இந்நிலையில், புதுடெல்லியில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவை சந்தித்த முகுல் ராய், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் கடிதத்தை அவரிடம் ஒப்படைத்தார்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகிவிட்டதாக குறிப்பிடிருந்த முகுல் ராய் விரைவில் பா.ஜ.க.வில் இணைவார் என்று எதிர்பார்க்கட்டது.

    அதற்கேற்ப, புதுடெல்லியில் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் முன்னிலையில் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார். மேற்கு வங்காளம் மாநில பா.ஜ.க. தலைவர் திலீப் கோஷ் அவருடன் இருந்தார். இந்த இணைப்புக்கு பின்னர் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, ரெயில்வே மந்திரி பியுஷ் கோயல் ஆகியோரையும் முகுல் ராய் சந்தித்தார்.
    Next Story
    ×